ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி

இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றதா தமிழக அரசு?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான ஊடக அடக்குமுறை
பதிப்பு: 2018 ஜூலை 16 03:36
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஜூலை 16 18:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலையீடு தமிழக அரசின் செயல்பாடுகளில் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், தமிழக செய்தி ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளில் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசாங்களின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளன. இதனை எதிர்கொள்ளவும் வருங்காலங்களில் சுதந்திரமாக ஊடகங்கள் செயல்படவும் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி என்ற பெயரில் தமிழக ஊடகவியலாளர்கள் பலரும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர். குறிப்பாக செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இயங்கும் தமிழக அரசாங்கம், ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒளிபரப்பும் செய்தி ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதும் கட்டுப்படுத்துவதும் கடந்த இரு வருடங்களாக அதிகரித்துள்ளன.
 
தமிழக அளவில் 60% வழங்குதலை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் செய்மதி தொலைக்காட்சி வலையமைப்பில் (Arasu Cable television network) இருந்து 11 செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் ஜனநாயகமற்றத் தன்மைக்கு எதிராக செல்வி ஜெயலலிதாவினால் (தமிழக முதல்வராய் இருந்தபொழுது) தொடங்கப்பட்டதுதான் அரசு செய்மதி வலையமைப்பு.

இந்த நிலையில், தூத்துக்குடி அரச பயங்கரவாதத்திற்கு பின்னரான சூழலில், ஊடகங்களின் நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் பணிகளிலும் தமிழக காவல்துறையினர் தலையிடுவது தொடர்கிறது.

சென்னை-சேலம் இடையிலான அதிவிரைவு சாலைத் திட்டத்திற்கு தமிழக விவசாயிகளும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து எதிர்த்து போராடி வரும் நிலையில், அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற மலையாளப் பதிப்பான மாத்ருபூமியின் இரு ஊடகவியலாளர்களும் தீக்கதிர் இதழின் ஒரு ஊடகவியலாளரும் கைது செய்யப்பட்டனர்.

செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசாங்கத்தின் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் இந்திய மத்திய ஆளும் பாரதிய ஜனதாவின் தலையீடு முழுவீச்சில் இருக்கும் நிலையில், ஊடகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலா? இந்திய, தமிழக அரசாங்கங்களின் கூட்டு நடவடிக்கையா? என்ற சந்தேகமும் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளன.

இத்தகைய சூழலில், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஊடக கலந்தாய்வு உரிமைகளும் பொறுப்புகளும் என்ற தலைப்பிலான கலந்தாய்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஊடகக் கல்விக்கான காயிதே மில்லத் சர்வதேச அக்கடமியில் நடந்த இந்தக் கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு தி இந்து பதிப்பகத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான இந்து என்.ராம் தலைமை வகித்தார்.

இந்தக் கலந்தாய்வில் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக பத்திரிகையாளர் பீர் முகமது தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான செய்திகளை சட்டப்பூர்வமான வழிகளில் கொண்டு சேர்ப்பவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

மக்களின் போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு எதிராக எச்சரிக்கைகள் வருகின்றன. இத்தகைய அச்சுறுத்தல்கள், இந்திய மத்திய அரசியல் சாசனத்தின் 19-வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் பிரதிநிதிகள் குழு, அடுத்ததாக, தமிழக முதலமைச்சரைச் சந்தித்து ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கு கோரிக்கை வைத்தனர். மேலும், பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள், ஊடக நிறுவனங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக அரசு கேபிளில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த புதிய தலைமுறை, நியூஸ் 7 சேனல்கள் பழைய இடங்களுக்குத் திரும்பியுள்ளன.

புதிய தலைமுறை 499லிருந்து 124வது இடத்துக்கும் நியூஸ் 7 சேனல் 168லிருந்து 137க்கும் திரும்பியுள்ளன என்பதனை ஊடகவியலாளர்கள் தங்கள் ஒற்றுமைக்கான வெற்றியாக கருதி வருகின்றனர்.