இலங்கை ரயில் சாரதிகள், காப்பாளர்களின்

வேலை நிறுத்தத்தினால் கொழும்பு கோட்டையில் பதற்றம்- இலங்கை அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் ரயில் நிலையம்

ராஜித, மங்கள ஆகியோரிடையே ஏற்பட்ட மேதலின் பின்னணி?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 08 23:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 08:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சம்பள உயர்வுகோரி இலங்கை ரயில் இயந்திர சாரதிகள், ரயில் காப்பாளர்கள் மறு அறிவித்தல் வரை இன்று புதன்கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்து்ள்ளனர். இதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் இன்று மாலை முதல் இலங்கை விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் நாளை வியாழக்கிழமை அதிகாலை முதல் கொழும்பில் இருந்து அனைத்துப் பகுதிகளுக்குமான விசேட பேரூந்து சேவைகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்படும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் இன்றிரவு அறிவித்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பித்தவுடன் மேலதிக பேரூந்து சேவைகளை நடத்துமாறு அரசாங்கம் உடனடியாகவே உத்தரவிட்டிருந்தது.
 
வீதிப் போக்குவரத்து அனுமதிகள் இன்றி பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேரூந்துகள் சேவையில் ஈடுபட முடியும் எனவும் அரசாங்கம் இன்று இரவு பணித்துள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகள், ரயில் காப்பாளர்கள் கோட்டை பேரூந்து நிலையத்திற்குச் சென்று பேரூந்துகளை பணியில் ஈடுபட அனுமதிக்காது தடுத்து நிறுத்தினர்.

சேவையில் ஈடுபடாமல் பேரூந்துகளை ரயில் இயந்திர சாரதிகள் தடுத்தமையினால், பெருமளவு பயணிகள் கோட்டை, புறக்கோட்டை பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆத்திரமடைந்த பயணிகள் பலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமும் நிலவியது. பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் கோட்டை ரயில் நிலையத்தைச் சுற்றிவளைத்து காவல் புரிந்தனர். பயணிகளுக்கும் ரயில் இயந்திர சாரதிகள், ரயில் காப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.

ரயில் சேவை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனரட்ன, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைத்தார்.

ஆனால் அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் என்ற முறையில் அந்த சம்பளவு உயர்வுக்கு அனுமதியளிக்கவில்லை.

இதனால் அமைச்சரவைக் கூட்டத்தில் இரு அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. முதுகெலும்பு இல்லாத அமைச்சரவை இதுதான் என அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறியிருந்தார்.

இந்த இரு அமைச்சர்களின் மோதலின் பின்னணியிலேயே இன்றைய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.