மட்டக்களப்பு மண்முனைப்பற்று

கோவில் குளத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு

மாற்றுக் காணிகள் வழங்கினாலும் மக்கள் அங்கு செல்ல விரும்பவில்லை
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 13 18:58
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 22:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில்குளம் பகுதியில் மரமுந்திரிகைச் செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.ராசா குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோவில்குளம் மற்றும் தாழங்குடா பகுதியில் மரமுந்திரிகைச் செய்கைக்காக சுவர்ணபூமி மூன்று ஏக்கர் திட்டத்தின் கீழ் சுமார் நூறு ஏக்கர் காணி ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு, மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் முந்திரிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டு செய்கை பண்ணப்பட்டது.
 
எனினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால், இச்செய்கையை வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் மரமுந்திரிச் செய்கைக்கு வழங்கப்பட்ட காணிகள், காணிச் சுவீகரிப்புத் சட்டத்தின் கீழ் பெறப்பட்டு கல்வியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூர்மை செய்தித் தளத்திற்கு அவர் தெரிவித்தார்.

அவ்வாறு பெறப்பட்ட காணிகளுக்கு மாற்றீடாக ஏறாவூரில் வேறு காணிகள் வழங்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதனால் காணியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

தாழங்குடா மற்றும் கோவில்குளம் பகுதியில் வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணிக்கு இலங்கை அரசாங்கத்தின் சுவர்ண பூமித் திட்டத்தின் கீழ் ஒப்பம் (மஞ்சள் பத்திரம்) வழங்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தில் இக்காணி இரத்த உறவு அல்லாதோருக்கு விற்கவோ அல்லது கைமாறவோ முடியாது என கூறப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த மாதம் இப்பகுதியில் இரு காணித் துண்டுகள் சகோதர சமூகத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது. இது எவ்வாறு முடியும் என ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிடுகையில்,

எனக்கு மூன்று பிள்ளைகள் மூவருக்கும் ஒரு ஏக்கர் படி பகிர்ந்தளிக்க முற்பட்ட போது பல சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இன்று வேறு இனத்தவர்களுக்கு எந்த ஒரு இரத்த உறவுமில்லாமல் எவ்வாறு காணியைக் கொள்வனவு செய்ய முடிந்தது. இதற்கு யார் அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பணத்திற்காக சோரம் போகும் அதிகாரிகளினால், எந்தச் சட்டத்தையும் மீறி செயற்பட முடியும் எனவும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஒரு இனம் செறிந்து வாழும் பகுதியில் மற்றொரு இனம் பலாத்காரமாக நுழைந்து உருவாக்கவுள்ள இன முறுகளைத் தடுப்பதற்கு அதிகாரிகள் முன்னேற்பாடுகளுடன் செயற்பட வேண்டும் எனவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.