கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

ஏறாவூர்ப்பற்று புன்னக்குடா பிரதேசத்தில் ஆட்லறி பயிற்சி முகாம் அமைக்க இலங்கை இராணுவம் முயற்சி

முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு- செங்கலடி பதுளை வீதியில் அமைக்குமாறு யோசனை
பதிப்பு: 2018 செப். 13 11:42
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 10:26
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு புன்னக்குடா பகுதியில் உள்ள எல்.ஆர்.சி காணியில் இலங்கை இராணுவத்தின் ஆட்லறி பயிற்சி முகாமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் பின்னர் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் குடியிருப்புக் காணிகளில் சுமார் 15 ஏக்கர் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டன. வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் 1990ஆம் ஆண்டு முறக்கொட்டாஞ்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணியின் பத்து ஏக்கரில் இலங்கை இராணுவத்தின் எட்டாவது ரெஜிமெண்ட் தலைமைக் காரியாலயமாக செயற்பட்டு வந்தது.
 
தற்போது அந்த முகாமை அகற்றி சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் புன்னக்குடா பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், புன்னக்குடா பகுதியில் இலங்கை இராணுவ முகாம் அமைப்பது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்ரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம் ஆகியோர் இந்த இராணுவ முகாமை செங்கலடி பதுளை வீதியில் அமைக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

புன்னக்குடா பகுதியில் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாது என முஸ்ஸிம் அரசியல் வாதிகளினால் இலங்கைப் பிரதர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்படடுள்ளன.

இந்த நிலையிலேயே இராணுவ முகாமை செங்கலடி பதுளை வீதியில் அமைக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் முகாம் அமைப்பது தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எதுவுமே பேசாது அமைதியாக இருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள தளவாய், சவுக்கடி ஐயங்கேணி, ஏறாவூர் தமிழ் பிரிவு, ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தின் எல்லை பகுதி ஆகியவற்றை இன்னுமொரு சமூகம் தமக்குரியதாக மாற்றியமைத்து வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைத்திருந்தது. ஆனால் வெறுமனே ஆதரவை மாத்திரம் வழங்கிவிட்டு கிழக்கு மாகாணத்தி்ல் தொடர்ச்சியாக இடம்பெறும் அத்தனை அத்துமீறல் குடியேற்றங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.