கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு

தமிழ் மாணவர்கள் கடத்தல், கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை
பதிப்பு: 2018 மே 18 14:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 27 14:31
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பில் தமிழர்கள் 11 பேர் வெள்ளை வானில் கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்கவுக்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
 
யூன் மாதம் 31ஆம் திகதிவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்களது உடல் எச்சங்கள் என கூறப்படும் சில எலும்புகளும் திருகோணமலை பகுதியிலுள்ள இலங்கைக் கடற்படையின் இரகசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியதோடு இலங்கைக் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டி.கே.பி திஸநாயக்க மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்கு விசாரணையில் டி.கே.பி. திஸநாயக்க முன்னிலையாகாத விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நீதவானின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவந்தார்.

அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமை தவறு என்பதை ஏற்றுக்கொண்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, டி.கே.பி தஸநாயக்கவை மன்றில் கட்டாயம் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்துமாறு நீதவான் லங்கா ஜயரத்ன கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஆனாலும் தஸநாயக்க நீதிமன்றில் வியாழக்கிழமை முன்னிலையாகவில்லை. இதனால் அவருக்கான விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த வழக்கில் மற்றுமொரு சந்தேக நபரான தலைமறைவாகியுள்ள கடற்படை முன்னாள் அதிகாரி சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக நீதிமன்றம் வியாழக்கிழமை இரண்டாவது தடவையாகவும் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையுடன் கூடிய பிடியாணை உத்தரவைப் பிறப்பித்ததுள்ளது.