இலங்கை அரசின் நிவாரண உதவிகளுக்காக

மட்டக்களப்பு வாகனேரியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் கையளிப்பு

இனம் தெரியா நபர்களினால் கொல்லப்பட்டதாகவும் சன்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிப்பு: 2018 ஒக். 02 15:02
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 02 19:22
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு வாகனேரியில் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலளார் பிரிவுக்குட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறிய கிராமங்கள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. வாகனேரி தமிழ் கிராமத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, சுற்றிவளைப்பில் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் என்று 87 தமிழ், இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
 
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மரணச் சான்றிதழ் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இலங்கை அரசின் உதவிகளை பெறமுடியும் என கொழும்பில் உள்ள இலங்கை அரச அதிகாரிகள் கூறுவதாக வாகனேரி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள குடாமுனை பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

போரின் போது பாதிக்கப்பட்ட 87 பேரில் 65 பேருக்கான பதிவுகள் மாத்திரமே உள்ளன. ஏனைய 30பேர் தமது தொழிலுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் வெளியில் சென்றவர்கள் இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை.

அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட உறவினர்களுக்கு இதுவரை எதுவுமே தெரியவுமில்லை. அது பற்றிய பதிவுகளும் இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தரப்பினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளுக்கு குடும்ப விபரங்கள் திரட்டப்படும் போது, கணவரின் நிலை தொடர்பாக அதிகாரிகள் கேட்கின்றனர்.

அவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்று கூறினால், கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் கொழும்பு உயர் அதிகாரிகளின் அழுத்தங்களின் மூலம் மரணப்பதிவு சான்றிதழ் வழங்கப்படுகின்றது.

இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என அ்ந்த மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உள்ள தமிழ் பேசும் அதிகாரிகளும் கொழும்பு உயர் அதிகாரிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து மரணச் சான்றிதழ்களை வழங்கி வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுமுள்ள தமது உறவினர்களுக்கு அடையாளம் தெரியாத நபா்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக பிரதேச வாசி ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

வாகனேரி கல்மலையில் இராணுவம் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 95ஆம் ஆண்டுவரைக்கும் முகாமிட்டிருந்தது. பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் அப்பகுதிக்கு சென்றிருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் முகாம் அகற்றப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற நீதி விசாரணையே வேண்டும் என்றும் நஷ்டஈடுகளோ, மரணச் சான்தழ்களோ அவசியம் இல்லை என்றும் அதனைப் பெற்றுக்கொள்ளப் போதில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கூறி வருகின்றது.

மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்படவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி கிடைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இர.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மரணச் சான்றிதழ்களை உறவினர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சம்பந்தன் கூறியிருந்தாார்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் போரினால் பாதிக்கப்பட்டு, மிகவும் வறுமை நிலையில் உள்ள பின் தங்கிய கிராமங்களில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இனம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறி மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தமிழரசுக் கட்சி மௌனமாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர்.