இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்புகள்

150 ஆண்டுகால சட்டப்பிரிவுகள் நீக்கப்படுகிறது; பிரச்சனைக்குரிய பகுதிகள் திருத்தப்படுகின்றன

சமீபத்திய தீர்ப்புகள் குறித்த பார்வை!
பதிப்பு: 2018 செப். 28 23:14
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: செப். 29 11:16
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய ஒன்றிய அளவில் 150 ஆண்டுகாலத்திற்கும் மேலாக இருந்த பாலியல், குடும்ப உறவு நிலைகள் குறித்து நிலைத்து வந்த சில சட்டப்பிரிவுகளில் திருத்தமும் நீக்கமும் செய்யப்பட்டதோடு, நிகழ்காலப் பிரச்சனைகளாக இருந்து வந்த ஆதார் எண், சபரிமலை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் அதிரடியான சில தீர்ப்புகளை, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது. இத்தீர்ப்புகள் தனிமனித சுதந்திரங்களை உறுதிப்படுத்தியுள்ளது; வழிப்பாட்டு தலங்களின் மீதான கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது; ஆனபொழுதும், மதவாதிகளும் அடிப்படைவாதிகளும் இத்தீர்ப்புகளுக்கு எதிராக கடும் வாதங்களையும் வைத்து வருகின்றனர்.
 
இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வருகிற ஒக்டோபர் 2 ஆம் நாள் ஓய்வுப்பெறப் போகும் நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே நிறைய அடிப்படை மாற்றங்களை தாங்கி தீர்ப்புகள் வெளிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையும் உரிமை: கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலைக்கு தென்னிந்தியா முழுமைக்கும், குறிப்பாக, தமிழகத்தில் இருந்து, பெரும்பான்மையான பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து நடந்து சென்று வழிப்பட்டு வந்தனர்.

பிற்காலத்தில், வாகனங்களில் சென்று வந்தாலும், 48 நாட்கள் விரதம் என்ற நிலை அவரவர் வசதிக்கு ஏற்ப, குறைந்த நாட்களையும் உள்ளடக்கிய விரத நாட்களாக மாறி வந்தாலும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் மாறாமல் இருந்தது.

ஆனாலும், சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழையக் காலம் காலமாகத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இன்று, 28.09.2018 வழங்கப்பட்ட இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி, இனிமேல், அனைத்து வயது பெண்களுக்கும் கோயிலில் நுழைய நீடித்தத் தடை நீக்கப்படுகிறது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினர். ஏனைய நால்வரும் பெண்களுக்கு இருந்த தடையினை நீக்கிய தீர்ப்பை வழங்கிய நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்டத் தீர்ப்பினையே வாசித்தார்.

இந்து மல்ஹோத்ரா வழங்கியத் தீர்ப்பில், "சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது; சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களைத் தொடர்புப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஏனைய நான்கு நீதிபதிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்தமையால், அதாவது, பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை வழங்கக்கூடாது, என்ற தீர்ப்பே இறுதியானது.

இத் தீர்ப்பு குறித்து தன் கீச்சில் (Twitter) பதிவிட்டிருந்த திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான கனிமொழி அவர்கள்,

"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், ஏற்கனவே வழங்கப்பட்டத் தீர்ப்பினாலேயே கேரளா மாநிலமெங்கும் வெள்ளப்பெருக்கெடுத்து மண்ணையும் மக்களையும் அழித்ததெனவும், இன்றைய உறுதிப்படுத்தப்பட்டத் தீர்ப்பினால் கோபமுறும் கடவுள், இந்திய நிலப்பரப்பிற்கு பெரும்கேட்டை விளைவிக்கப்போகிறார் என இந்துத்துவ மற்றும் கடும்போக்கு வலதுசாரி அமைப்பினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

சட்டப்பிரிவு 497

திருமணமான ஆண் வேறொரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருக்கும்பட்சத்தில், அப்பெண்ணின் கணவர் வழக்குத் தொடுத்தால், உறவில் ஈடுப்படும் ஆணுக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்க இந்திய ஒன்றியச் சட்டப்பிரிவு 497 பரிந்துரைக்கிறது. பெண்ணுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிய வழக்கின் தீர்ப்பு செப் 27, 2018 அன்று வெளியாகியது.

அதில், "கணவர் என்பவர் பெண்ணின் முதலாளி அல்ல. திருமணத்திற்கு வெளியேயான உறவு குற்றவியல் பிரிவின் கீழான குற்ற நடவடிக்கையாக கருத முடியாது. குடிமையியல் பிரிவின் கீழேயே இது குற்றமாகும். விவாகரத்து வழக்காக பதிவுசெய்யப்படலாமே தவிர, குற்ற நடவடிக்கையாக பதிவு செய்யப்படக்கூடாது என்ற நிலையில், சட்டப்பிரிவு 497 முழுமையாக நீக்கப்படுவதாக" தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பெண்ணின் கணவர், அப்பெண்ணை தனது உடமையாக கருதும் நிலையிலேயே, அப்பெண்ணுடன் உறவில் இருந்த ஆணுக்கு எதிராக தண்டனை வழங்கக் கோரும் உரிமை பெறுகிறார். இத்தீர்ப்பு அதனையே தகர்ப்பதால், குற்றவியல் பிரிவின் கீழ் எதிர்த்தர்ப்பு ஆணுக்கு தண்டனை வழங்குவதை இந்திய ஒன்றிய உச்சநீதி மன்ற அமர்வு நிராகரிக்கிறது.

மாறாக, கணவன், மனைவி இருவரும் அவரவர் வாழ்வில் எடுக்கும் முடிவுக்கு அவரவர் உரிமையாகிறார் என்பதனை இத்தீர்ப்பு வலியுறுத்துகிறது.

ஆதார் தீர்ப்பு

2016இல் புகுத்தப்பட்ட சட்ட உறுப்பின்படி, இந்திய ஒன்றிய குடிமகன்-மகள்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டது. இந்திய ஒன்றியம் முழுவதும் அனைத்து அரசு, அரசு சாரா நிறுவன நடவடிக்கைகள் முதல், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், கைப்பேசி எண் உள்ளிட்ட சராசரி அன்றாட தேவைகளுக்கும் கூட ஆதார் எண் தேவை என்ற நிலை சமீபத்தில் பல்கி பெருகியது.

இதனை எதிர்த்து நடந்த வழக்கில், தொடர்ச்சியாக 38 நாட்களுக்கு பிறகான வாதப் பிரதி வாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26 ஆம் நாள் வெளியானத் தீர்ப்பில்,

தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்றுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

தீர்ப்பின் படி ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 377

1861 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனியாதிக்க காலத்தில் பாலியல் நடவடிக்கைகளின் கட்டுப்பாடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமானது, பின்பு இந்திய ஒன்றிய அரசியல் சாசனத்தில் 377 சட்டப்பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டது.

இச்சட்டப்பிரிவு, இயற்கைக்கு மாறான பாலியல் உறவு வகைகள் என தன்பாலின ஈர்ப்பு, விலங்கு, திருநங்கை உள்ளிட்ட பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கு வழிவகுத்திருந்தது.

செப்டம்பர் மாதம் 6 ஆம் நாள் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில், "158 ஆண்டுகால சட்டப்பிரிவை நீக்கியதோடு, தன்பாலின ஈர்ப்பு பாலியல் நடவடிக்கைகள் தனி மனித வாழ்வு மற்றும் தேர்வு தொடர்பானவை என்றும் இதனால் சமூகத்திற்கு எவ்வித இடர்பாடுகளும் உருவானதாக சான்றுகள் இல்லை எனவும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு டெல்லியில் இயங்கும் நாஷ் மற்றும் பெத்பாவ் விரோத் அண்டோலன் என்ற அரசு சாரா அமைப்புகள் இச்சட்டப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடுத்தன. ஆனால், இம்மனு நிராகரிக்கபட்டது. 8 ஆண்டுகளுக்கு பின்னர், 2009 ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்பு குற்றவியல் நடவடிக்கை என்ற பதத்தில் இருந்து சட்டவிரோதமானவை என்ற அளவுகோலில் திருத்தம் செய்யப்பட்டது.

2018இல் மீண்டும் வழக்குக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய ஒன்றிய அரசியல் அமைப்பின் உறுப்பு 14 வழங்கும் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மற்றும் உறுப்பு 15 வழங்கும் சாதி, இனம், வாழ்வியல் நம்பிக்கைக்கொண்டு எவரையும் தரம் பிரித்தல் ஆகாது என்ற உரிமைகளுக்கு எதிரானவையாக சட்டப்பிரிவு 377 இருப்பதாக வைக்கப்பட்ட வாதத்தினை உச்சநீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்டத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே இத்தகைய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா வழங்கினாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அவர் வழங்கியத் தீர்ப்புகள் தமிழர்களுக்கு எதிரானவையே என்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மிகக்குறிப்பாக, கூடங்குளம் வழக்கில் இந்திய ஒன்றிய அணுசக்தி கழகத்திற்கு ஆதரவாக செயற்பட்டது, 'நீட்' தேர்வில் தமிழகக் குரலை பொருட்படுத்தாதது என பல்வேறு வழக்குகளை தமிழர்களை இன்னல்களுக்கு ஆளாக்கியவர் தீபக் மிஸ்ரா என்று தமிழர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.