வடமாகாணம்

மன்னாரில் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் வரட்சியினால் விவசாயம் பாதிப்பு- நிவாரணம் வழங்க ஏற்பாடு

முப்பத்தி நான்காயிரம் பேர் நேரடியாகப் பாதிப்பு
பதிப்பு: 2018 செப். 29 07:53
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 29 16:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக ஐந்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இதனால் இந்தக் கிராமங்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தேவையான குடிநீர் விநியோகத்தை நீர்த்தாங்கிகள் மூலம் வழங்கி வருவதாக மன்னார் செயலகம் தெரிவித்துள்ளது. ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த முப்பத்தி நான்காயிரம் பொதுமக்கள் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தொடர்சியாக வரட்சி நிலவி வரும் நிலையில் குடிநீர் கிணறுகள், விவசாயக் கிணறுகள், விவசாய குளங்கள் ஆகியவை நீரின்றி காணப்படுகின்றன. அனுராதபுரத்தில் ஆரம்பமாகி மன்னார் அரிப்பு கடலில் சங்கமமாகும் அருவியாறும் நீரின்றி காணப்படுகின்றது.
 
இதனால் இந்த ஆற்றை நம்பி தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் விவசாயிகளும் பொதுமக்களும் தமக்கு வரட்சி நிவாரணம் வழங்குமாறு கோரி தினமும் பிரதேசச் செயலகங்களை நோக்கிச் செல்கின்றனர்.

இதனால் பாதிப்புக்குள்ளான ஐந்து பிரதேசங்களுக்கும் பொறுப்பான பிரதேச செயலாளர்கள், நிவாரணம் வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் கிறிஸ்ரோபர் அன்ரன் மோகன்ராஸ், கொழும்பில் உள்ள இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் இலங்கை புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சுக்கும் நிவாரணம் வழங்குமாறு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியால் விவசாயிகள் அனைவரும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியதோடு தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் சிறு விவசாய பண்னையாளர்கள் கால்நடை வளர்ப்போர் ஆகியோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மன்னார் தமிழர் பகுதிகளில் புதிதாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரனத்தில் மேற்கொள்ளப்பட்ட தென்னைச் செய்கையும் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும் பண முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட தென்னைச் செய்கையை முற்றாக கைவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தென்னந் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.