தமிழர் தாயகம் யாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை பாதுகாப்பது தொடர்பாக வடமாகாண சபை தீர்மானம்

மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பது எனவும் முடிவு
பதிப்பு: 2018 செப். 29 21:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 09:58
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போரின் இறுதிக்கட்டத்தின் பின்னரான காலப்பகுதியில் அதாவது 2009 ஆம் ஆண்டின் பின்னர், ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் சூறையாடப்பட்டு அவற்றை இல்லாதொழிக்க முயற்சி இடம்பெற்றுவருகின்றது. இந்தநிலையில் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் உள்ள சவுக்கங்காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சபை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு நடைபெற்றபோதே மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை விசமிகள் எரியூட்டி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
விறகுக்காகவும் திட்டமிட்ட சில நடவடிக்கைகளுக்காகவும் இத்தகைய எரியூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை பல தடவைகள் மாகாண சபையில் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனாலும் வட மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்ளோ அல்லது கொழும்பில் உள்ள இலங்கை அரசின் திணைக்களங்களோ கவனம் செலுத்துவதில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

single photo
யாழ் வடமரட்சி கிழக்கு குடத்தனை மணற்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காடு 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதியன்று அடையாளம் தெரியாத நபர்களினால் தீயிடப்பட்டபோது வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தவேளை எடுக்கப்பட்ட படம்

சவுக்கங்காடு தீப்பற்றி எரிந்தால் மாத்திரம் இலங்கை அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் அல்லது இலங்கை இராணுவம் மற்றும் அப்பகுதி பொது மக்கள் தீயை அணைப்பதற்கு முயற்சிகள் எடுக்கின்றார்களே தவிர, அதனைப் பாதுகாப்பதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சாடியுள்ளார்.

வடமாகாண சபையின் விவசாய அமைச்சராக பொ.ஜங்கரநேசன் பதவி வகித்தபோது தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் சில வேலைத் திட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் இன்று அவை வெறும் பெயர்ப் பலகையுடன் மட்டுமே காணப்படுகின்றது.

வடக்கில் மரங்களை நாட்டப்போவதாகவும் பசுமைச்சூழலை உருவாக்கப்போவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றனவே தவிர தற்போதுள்ள இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடு்க்கப்படுவதில்லை.

2006 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடமராட்சிக் கிழக்கில், மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சவுக்கங்காடுகள் பராமரிக்கப்படவில்லை-- பிரதேச மக்கள்

எனவே வடமாகாண சபை இருக்கின்ற காலத்தில் வடமராட்சி கிழக்கிலுள்ள சவுக்கங்காடுகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக சபை அமர்வில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி குடத்தனை, மணற்காடு பகுதியிலுள்ள சவுக்கங்காடு அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கூட்டமைப்பு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

குடத்தனை மணற்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காடு 2014ஆம் ஆண்டு 17 ஆம் திகதியன்று அடையாளம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்டது. இதனால் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பில் இருந்த சவுக்குமரம் எரிந்து சாம்பராகியது.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மணற்காடு பகுதியில் உள்ள சவுக்கங்காடு அடையாளம் தெரியாத நபர்களினால் தீயிடப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடமராட்சிக் கிழக்கில், மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சவுக்கங்காடுகள் பராமரிக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை, விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினால் அதிகளவான மரங்கள் நாட்டப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டதுடன் தேக்கங்காடு மரமுந்திரிகை தோட்டம் உள்ளிட்ட பல பண்ணைகள் அமைக்கப்பட்டு இயற்கை வளங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தன.

எனினும் 2009 ஆம் ஆண்டின் பின்னர், அவை அழிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு- கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படையினரின் உதவியுடன் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.