கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாகரையில் காணிகளை அபகரிக்க இலங்கை இராணுவம் முயற்சி வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெறப்பட்டதாக முறைப்பாடு

காணி உரிமையாளர்கள் அச்சம்
பதிப்பு: 2018 ஒக். 02 07:41
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 02 13:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வாகரை மக்கள் குடியிருந்த காணியை, இலங்கை அரச காணி எனக் கூறி அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி மற்றும் ஊரியன் கட்டு ஆகிய கிராம சேவகர் பிரிவில் 56 குடும்பங்களின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படையின் 233 ஆவது பிரிவு, மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் வான், கடல் மற்றும் தரைவழி என முப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து வாகரையில் குடியிருந்த சுமார் 7500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தன.
 
மக்களின் இடப்பெயர்வினையடுத்து வாகரைப் பகுதியை ஆக்கிரமித்த இலங்கை இராணுவத்தினர் மக்கள் குடியிருந்த கட்டடங்கள் மற்றும் வளவுகளை அபகரித்து இராணுவம் முகாம் அமைத்தனர்.

முகாமிட்டு மூன்று வருடங்களின் பின்னர் காரணம் ஏதும் கூறாது ஏழு குடும்பங்களிடம் வெற்றுப் பேப்பரில் கையெப்பத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களின் குடியிருப்புக் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் பலகையில் போடப்பட்டது.

எனினும் எதற்காக கையெப்பம் பெறப்பட்டது என தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

தற்போது, மீண்டும் காணி அளவிடப்பட வேண்டும் எனக் கூறி இன்று திங்கட்கிழமை அளவீடு செய்ய முற்பட்ட போது, எங்கள் காணி அபகரிக்கப்படாது என்ற உத்தரவாதம் பிரதேச செயலகத்தினால் எழுத்து மூலம் வழங்கப்படுமானால், தங்கள் காணிகளை அடையாளம் காட்ட முன்வருவதாக தெரிவித்தனர்.

இதற்கு உறுதிவழங்கிய பிரதேச செயலக அதிகாரிகளின் உறுதிமொழியையடுத்து காணி அடையாளம் காணப்பட்டது.

எனினும், தற்போது 26 குடும்பங்களுக்கு மாத்திரம் தான் பதிவுகள் இருப்பதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரித்துள்ளனர். ஏனையோரின் காணி ஆதாரமில்லாத காணி எனத் தெரிவித்து அபகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம் எமது குடியிருப்புக்களிலிருந்து வெறியேறி, எமது காணி எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். எனவும் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எவ்வாறாயினும், 2006ஆம் ஆண்டு இலங்கை இராணுவத் தாக்குதலினால் இடம்பெயர்ந்த நிலையில் இவர்களின் உடமைகள் சொத்துக்கள் அழிவடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.