வஞ்சிக்கப்படும் தமிழகமும் வேதாந்தாவின் நச்சு வலையும்

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நீரகக்கரிம (hydrocarbon) முற்றாய்விற்கென 55 இடங்களை இந்திய அரசு வளைத்துள்ளது

மாநிலங்களின் வளங்களை சுரண்டும் இந்திய நடுவன் அரசு
பதிப்பு: 2018 ஒக். 02 02:52
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஒக். 06 23:02
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
5900 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய ஒன்றியத்தினுள் 55 பகுதிகளை எண்ணெய் மற்றும் வாயுக்கள் (Oil and gas exploration) முற்றாய்வுக்கென ஒதுக்கியுள்ளதாக, கல்லெண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் (Petroleum and natural gas) தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் (ஒக்டோபர் 1, 2018). இதில், 41 பகுதிகளை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. வட இந்தியாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கப் போராடிய பழங்குடி மக்களுக்கு எதிரான பச்சை வேட்டை உட்பட தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் தமிழர்களை சுட்டுக்கொன்றது என இந்திய ஒன்றிய அரசு நடத்தியது அனைத்தும் இதே வேதாந்தா நிறுவனத்தின் நலனுக்காகத்தான் என தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன் கூர்மைக்கு தெரிவித்தார்.
 
5900 கோடி ரூபாய் முதலீட்டில் 1.5 லட்சம் கோடி பெருமானமுள்ள நீரகக்கரிமத்தை (hydrocarbon) இந்நிறுவனங்கள் அகழ்ந்து எடுக்கப்போகின்றன என இந்திய நடுவனரசு அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகப் பகுதிகளை பொறுத்தவரை, இரண்டுப் பகுதிகள் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஒரு பகுதி எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்திற்கும் (Oil and Natural Gas Company) என ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் நாகை மாவட்டத்தின் கீழ் வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பல ஆண்டுகளாக, இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் செய்துவரும் கச்சா எண்ணெய் (crude oil) மற்றும் நீரகக்கரிமம் (hydrocarbon) அகழ்ந்நெடுத்தலினால், பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும் விவசாய நிலங்கள் பல அழிந்துவரும் நிலையில், பல ஆண்டுகளாக எண்ணெய் வள முற்றாய்விற்கெதிராக காவிரிப்படுகை மக்கள் போராடிவருகிறார்கள்.

நெடுவாசல், கதிராமங்கலம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப்படுகைப் பகுதிகளில் தொடர்ச்சியான பெருந்திரள் பொதுமக்களின் அறவழிப்போராட்டம் நடந்து வருகிறது.

இவையெதனையும் பொருட்படுத்தாது இப்பொழுது புதிதாக நான்கு இடங்களை தமிழகப் பகுதிகளில் ஒதுக்கியுள்ளது இந்திய ஒன்றிய நடுவண் அரசு.

தொடர்ச்சியாக வஞ்சிப்படும் தமிழகம் குறித்தும் வேதாந்தா நிறுவனம் – இந்திய நடுவன் அரசின் கூட்டு குறித்து கூர்மை செய்தித்தளத்திற்கு தன் கருத்தைப் பகிர்ந்துகொண்ட, தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன் அவர்கள்,

"இந்திய ஒன்றிய நடுவன் அரசு தொடர்ச்சியாக தமிழர்கள் மீது தமிழர்களின் வளங்கள் மீதும் ஒருவகையான ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. காவிரிப் படுகைப் பகுதியான தன்சை நாகை உள்ள மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தமிழர்களாகிய நாம் போராடி வருகிற வேளையில், அதனை எண்ணெய் வள மண்டலமாக அறிவிக்கிறது.

"இந்திய உச்சநீதி மன்றம், காவிரி நதி நீர் சிக்கலில் தமிழர்களுக்கு இரண்டகம் செய்துள்ள நிலையிலும் கூட, மேற்கு பருவ மழையின் விளைவாக கருநாடகத்தில் அணை நிரம்பியதால் அவர்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.

"இருப்பினும், அந்நீரை தஞ்சை காவிரி விவசாயப் பகுதிகள் வழியே இயற்கையான நீரோட்டத்தில் செல்ல வேண்டிய நீரை வழிமறித்து, திட்டமிட்டு கடலில் கலந்து வீணாக்க செய்தனர். இச்சதிவேலையில், இந்திய நடுவன் அரசும் அதன் இன்றைய கைப்பாவையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழக அரசாங்கமும் இணைந்தே செய்தது.

"காவிரிப்படுகையின் விவசாயிகளுக்கு உரிய நீர் சென்று சேராமல் தடுத்தால்தான், அவர்கள் வேளாண் தொழிலை முற்றுமுழுதாக கைவிடுவர். அந்நிலங்களை கையகப்படுத்தி, நீரகக்கரிமம் மற்றும் எண்ணெய் வளங்களை சுரண்ட முடியும் எனக் கருதியே செய்தனர்.

"இதன் தொடர்ச்சியில்தான், இன்று வேதாந்தா மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தமிழகப் பகுதிகளை பார்க்கவேண்டும்.

"தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்களின் பச்சைப்படுகொலைக்கு காரணமான வேதாந்தா நிறுவனமானது, ஏற்கனவே இந்தியா முழவதும் இயற்கை வளங்களை சுரண்டி கொழுத்த நிறுவனமாகும்.

"குறிப்பாக, ஓடிசா போன்ற பகுதிகளில் உள்ள வளங்களை சுரண்ட இடையூறாக அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் பழங்குடியின மக்கள் இருப்பதால் இந்திய நடுவன் அரசுடன் இணைத்து, 'பச்சை வேட்டை' என்ற பச்சை படுகொலைகளை நடத்தியது.

"இத்தகைய வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் மனித உரிமை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடியே தீரவேண்டும். பச்சை வேட்டை என்ற பெயரில் நடந்த கொடூரங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் என நாங்கள் சொல்வதை மிகைப்படுத்தலாக கருதுவோர் இங்கு உண்டு.

"உண்மையில் ஸ்டெர்லைட் ஆலையினை எதிர்த்து நடந்துவந்த தூத்துக்குடி மக்களின் அறவழி போராட்டத்தை ஆயுதத்தைக் கொண்டு தானே இந்த அரசாங்கங்கள் முடக்கின. நாங்கள் எதற்கும் துணிந்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக நாங்கள் எந்தவொரு முடிவிற்கும் போவோம் என்ற அவர்களின் கொடூரத் துணிச்சல்தான் இதில் இருந்து நாம் புரிந்துக்கொள்ளும் உண்மை.

"எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்கும் செயலையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அசாம் - மணிப்பூர் - ஜார்கண்ட் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இந்த அரசு செய்தும் வரும் படுகொலையை, பொதுமக்கள் மீதான வன்முறையை,, போராடுவோரை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை நாம் கண்டுகொண்டு தானே இருக்கிறோம்.

"அது நாளை தமிழ்நாட்டிலும் நிச்சயமாக நடக்கும். நம்மை, நம் தமிழ்நாட்டை, நம் மக்களை, நம் மண்ணை காக்க உறுதியாக நாம் போராடியே தீர வேண்டும். இல்லையென்றால் தமிழீழத்தில் நடந்ததை போல இங்கும் ஒரு இனப்படுகொலை நடைபெறும்"

என்று தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை வள கொள்ளைக்கு எதிராகவும் மண்ணைக் காக்கவும் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பதன் பின்னணியில் தமிழ்நாடு தன் இறையாண்மையை இழந்து நிற்கிறது என்ற அளவுகோலில் பொறுத்திப்பார்க்க வேண்டும்.

இந்திய நடுவன் அரசு தன் முழு அதிகாரத்தையும் தன்னகத்தே நகர்த்திக்கொண்டே செல்வதன் நீட்சி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் முழுமையான ஒற்றையாட்சி அரசியல் அதிகாரத்தின் கீழே என்ற நிலைதான் உருவாகும். தமிழகமும் இந்திய பெருநிலப்பரப்பின் பிற மாநில அரசுகளும் முழுமையான, சம அளவிலான அதிகாரப்பகிர்வு கொண்ட அரசியல் தீர்விற்கு குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது.