வடக்கு மாகாணம் கிளிநொச்சியில்

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்துடன் வீதியைக் கடக்கும் மக்கள்- யாரும் கவனிக்கவில்லையென விசனம்

முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்
பதிப்பு: 2018 ஒக். 04 09:40
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 24 15:22
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போர் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியதைத் தொடர்ந்து வடபகுதிக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கான புகையிரத சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு போக்குவரத்து இடம்பெற்றுவருகின்ற போதிலும் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. குறிப்பாக ஆனந்தபுரம் கிராமத்தையும் கிளிநொச்சி நகர்ப்பகுதியையும் இணைக்கும் புகையிரதக் கடவை புனித திரேசா பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் புகையிரதக் கடவை உட்பட பல முக்கிய கடவைகள் பாதுகாப்பற்றவையாக காணப்படுகின்றன.
 
இதனால் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் நோயாளர்கள் உட்பட பலரும் அச்சத்துடன் பயணிப்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையால் நாளாந்தம் பயணிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஊனமுற்றோர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் மாணவர்கள் உட்பட அதிகளவானோரை தான் அவ்வீதியால் ஏற்றிச் செல்வதாகவும் பல நூற்றுக்கணக்கானோர் குறித்த பாதையை நாளாந்தம் அச்சத்துடன் பயன்படுத்துவதாகவும் இது குறித்து பல தடவைகள் முறையிட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை என விசனம் வெளியிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் உள்ளன. இதில் பல முக்கியமான வீதிகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

இந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினால் தொடர்ச்சியாக விபத்துக்களும் உயிரிழப்புக்களும் இடம்பெறுகின்றன.

எனவே, இது தொடர்பாக விரைவில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.