இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்

அடுத்த நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை 644 பில்லியன்-கடன் பெறவேண்டிய நிலை என்கிறார் மங்கள

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவிகள் எதிர்பார்ப்பு
பதிப்பு: 2018 ஒக். 04 06:58
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 09:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இரண்டாயிரத்தி 57 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான மொத்த செலவு 3982 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2017 ஆண்டோடு ஒப்பிடும்போது இது ஆயிரத்தி 259 பில்லியன் ரூபாய்களினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த வருடத்தைவிட 46 வீத அதிகரிப்பாக இருந்தது. 2018 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் 2175 பில்லியன் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் கிடைக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார்.
 
அதேவேளை, 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குறை நிரப்பிற்கான 1807 பில்லியன் நிதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக பெற்றுக் கொள்ளவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்தளவு நிதியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 வீதமாகும்.

கடன்களை குறைக்க நினைத்தாலும் மேலும் கடன்களைப் பெற வேண்டிய நிலையுள்ளது என நிதியமைச்சர் மங்கள சமரவீர ஊடகம் ஒன்றுக்குக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சர்வதேச நாணய நிதியம். உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து குறுகிய, நீண்டகால கடன்கள் மற்றும் நன்கொடைகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 2019ஆம் ஆண்டு கடன் மீளச்செலுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள இரண்டாயிரத்தி 57 பில்லியன் ரூபாய்ககள் மிக அதிகளவான தொகை என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிகப்படவுள்ளது. இந்த நிலையில் முன்னோடி மதிப்பீட்டு அறிக்கை அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது குறித்த விபரங்ளை நிதியமைச்சு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.