இலங்கை மலையகத்தில்

தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம்- புறக்கணிக்கப்படுவதாகக் கவலை தெரிவிப்பு

தொழில் சங்கங்கள் மீது குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஒக். 09 15:31
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 19:39
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் சம்பளவு உயர்வு விடயத்தில் ஏமாற்றி வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை தோட்டத் தொழிலாளர்கள் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியில் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தனை திம்புள்ள தோட்ட தொழிலாளர்கள் உட்பட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டனர். ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், சுலோகங்களையும் கறுப்புக் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாக வாக்குறுதியளித்த மைத்திரி- ரணில் அரசாங்கம் மலையக மக்களைப் புறக்கணித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குற்றம் சுமத்தினர்.

சம்பள உயர்வு கோரி, போராட்டங்கள் ஹற்றன், நுவரெலிய. கண்டி உள்ளிட்ட மலையகத்தின் முக்கியமான பிரதேசங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, இலங்கையிலுள்ள எண்ணூற்றி 48 பெருந்தோட்டங்களில் சுமார் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய ஐம்பதாயிரம் பேர் பதிவு செய்யப்படவில்லை.

ஆனாலும் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதாக மலையகத் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

75 சதவீதம் வேலை நாட்கள் சமுகமளித்தால் மாத்திரமே ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைக்கும். அதற்குக் குறைவான நாட்கள் வேலை செய்திருந்தால் அதனைப் பெற முடியாது.

மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கு ஆகக் குறைந்தது ரூபாய் பத்தாயிரம் ஆயிரம் சம்பள அதிகரிக்கப்பு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சம்பள உயர்வு எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை.

எனினும் இடைக்கால கொடுப்பனவாக ரூபாய் 2500 வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது. ஆனாலும் 2015ஆம் ஆண்டு ஜுன், ஜுலை மாதங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்தது.

நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையை தொழிலாளர்கள் 2015ஆம் ஆண்டு முன் வைத்திருந்தனர். ஆனால் 720 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க முடியுமென இலங்கை அரசாங்கம் அப்போது கூறியிருந்தது.

அடிப்படை சம்பளம் 550 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு 190 ரூபாவாகவும் வழங்கப்பட்டிருந்தது. குறை நிரப்புக் கொடுப்பனவு ரூபாய் 30 வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பள அதிகரிப்பை தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் அப்போது கொள்கையளவில் ஏற்றிருந்தது. ஆனால் இறுதியாக இடம்பெற்ற பேச்சுக்களின்போது சம்மேளனம், இலங்கை அரசாங்கம் தீர்மானித்த அந்த சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

ஆக 450 ரூபாய் மாத்திரமே அடிப்படைச் சம்பளமாக வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1972ம் ஆண்டு ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் சம்பளத் திட்டத்தை மாற்றியமைக்க தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினால் புதிய யோசனையொன்றும் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மலையகத் தொழிற்சங்கங்கள் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.

அதேவேளை, 2016 ஆம் ஆண்டு தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன், தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

ஆளால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு மாறாக, 450 ரூபாயாக இருந்த அடிப்படைச் சம்பளம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தோட்டத் தொழிலாளர்கள் விரும்பாத சம்பளக் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை தொழிற்சங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் 2016 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் மீது திணித்ததாக தொழிலாளர்கள் அப்போது குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டும் சம்பள உயர்வு கோரி போராட்டங்கள் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையைத்தான் 2018 ஆம் ஆண்டும் முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.