வடமாகாணம்

மன்னார் மாவட்டத்தில் பெருமளவு காணிகள் சட்டத்திற்கு முரணாக அபகரிப்பு- மக்கள் முறைப்பாடு

தமிழகத்துக்கு இடம்பெயர்ந்தவர்களின் காணிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஒக். 10 00:19
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 10 11:51
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் நீரேந்து பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள பெருமளவு புலவுக்காணிகள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான குடிநிலக்காணிகளும் விவசாய நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கொழும்பு அரசியல் செல்வாக்குடன் ஒரு சில தமிழ் பேசும் அரச அதிகாரிகளும் கிராமசேவையாளர்களும் உடந்தையாக செயற்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகமான மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வசித்து வரும் குடும்பங்களின் காணிகளும் தோட்டக்காணிகளும் விவசாய நிலங்களுமே அபகரிக்கப்படுவதாக அயல் கிராமங்களில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.
 
குறித்த காணிகள் அனைத்திற்கும் நிலையான உறுதிப்பத்திரங்களும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களும் ஏனைய ஆவணங்களும் இடம்பெயர்ந்து, தமிழ் நாட்டில் வாழும் மக்களிடம் உண்டு.

அத்துடன் இவ்வாறு அபகரிக்கப்படும் காணிகளில் முன்பு வசித்த மக்களினால் அமைக்கப்பட்ட கட்டட இடிபாடுகளும் அத்திவாரங்களும் இன்று வரை அப்படியே இருக்கின்றன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளராக பதவி வகிக்கின்றார். ஆனால் மன்னாரில் காணிகள் திட்டமிடப்பட்ட முறையில் அபகரிக்கப்படுகின்றமை குறித்து அவர் எதுவுமே பேசவில்லையெனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

28 வருடங்களுக்கு முன்னர் இக்காணிகளில் வசித்த மக்களினால் நடப்பட்ட தென்னை, மா, பலா போன்ற பயன்தரும் மரங்கள், இன்று வரை காணப்படுவதாகவும் அயல் கிராமங்களில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலேயே குறித்த காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைக்கு தமிழ் பேசும் சில கிராம சேவையாளர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அயல் கிராமங்களில் வாழும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் சின்னக்கடை, பெரியகடை ஆகிய கிராமங்களில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

சௌத்பார், சாந்திபுரம் ஆகிய பகுதிகளில் காணி அபகரிப்பு பெரும் எண்ணிக்கையில் நடைபெற்று வருகின்றது.

இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட மிகவும் பெறுமதி வாய்ந்த அரச காணித் துண்டுகளை கொழும்பில் உள்ள உயா் அதிகாாிகளின் அழுத்தங்களினால் மன்னார் பிரதேச செயலகம் ஊடாக வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை தமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தல், விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் முருங்கன் கொல்லர்சிறுகுளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை நீர்பாசன திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள நீரேந்து பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள பெருமளவு புலவுக்காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

காணித்துண்டுகளை அப்பகுதிக்கு பொறுப்பான கிராமசேவையாளர் கொழும்பு அரசியல் செல்வாக்குடன் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நானாட்டான் பிரதேச செயலகம் ஊடாக பங்கிட்டு வழங்கி வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்தக் கிராமசேவையாளரின் சட்ட விரோத நடவடிக்கை காரணமாக முருங்கன் செம்மண்தீவு பகுதிகளைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் நீர்ப்பாசன திணைக்களம் இது தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்டுள்ள முருங்கன் விவசாயிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மௌனமாக இருப்பதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளராக பதவி வகிக்கின்றார்.

ஆனால் மன்னாரில் காணிகள் திட்டமிடப்பட்ட முறையில் அபகரிக்கப்படுகின்றமை குறித்து அவர் எதுவுமே பேசவில்லையெனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.