மட்டக்களப்பு - வாழைச்சேனையில்

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சுத்திகரிப்பு ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி

குடிமனைகளுக்கு அண்மையில் கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் விசனம்
பதிப்பு: 2018 ஒக். 10 20:30
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 11 12:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில், கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காகச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வாழைச்சேனை பிரதேச சபையில் சுத்திகரிப்பாளராக கடமையாற்றும் வாழைச்சேனை - விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான, 48 வயதுடைய கணேசன் என அழைக்கப்படும் பழனியாண்டி முனியாண்டி என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
 
வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றப்படும் கழிவுகள், கோறளைப்பற்று வடக்கு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் பகுதியில் கொட்டப்பட்டுவருகின்றன.

வழமைபோன்று நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கழிவுப் பொருட்களைக் கொட்டுவதற்காகச் சென்றபோதே, அப்பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கியுள்ளது.

கழிவுப் பொருட்களை ஆலங்குளம்பகுதியில் கொட்டுவதனால் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையெடுப்பதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் கழிவுப் பொருட்களை கொட்டுவதைத் தவிர்த்து குறித்த கழிவுகளை மீள்சுழற்சி செய்வதன் மூலம் வேறுதேவைகளுக்கு பயன்படுத்த முடியும் என, பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

காட்டு யானைகளின் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உட்புகுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.