வடமாகாணம்

மன்னாரில் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களினால் பலர் பாதிப்பு

குடும்பப் பெண்கள் சிலர் தற்கொலை செய்வதாகவும் முறைப்பாடு
பதிப்பு: 2018 ஒக். 12 07:07
புதுப்பிப்பு: ஒக். 12 12:22
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கொழும்பை தலைமையகமாகக் கொண்டு மன்னாரில் கிளை அமைத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்கடன்களைப் பெற்று தினமும் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தென்னிலங்கையைத் தலைமையமாகக் கொண்டுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மன்னாரில் இயங்கி வருகின்றன. இந்நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து பல்வேறு வகையான கவர்ச்சிகர நுண்கடன் திட்டங்களை அமுல்படுத்தி பெண்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் அதிக வட்டியுடன் வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் கடனாளிகளிடமிருந்து அறவிடப்படுகின்றன.
 
இந்தக் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் ஏனைய வங்கிகளைப் போன்று கடும் நிபந்தனைகள் எவற்றையும் கடனாளிகளுக்கு விதிப்பதில்லை.

இதனால், குடும்பப் பெண்கள் மத்தியில் இந்த நுண்கடன் நிறுவனங்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்படுகின்றது. கடன்களைப் பெறுவதற்கு ஐவருக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து குழுக்கள் அமைத்தாலே போதுமானதாகும்.

ஒருசில தினங்களிலேயே பயனாளிகளின் கைகளிற்கு பணம் கிடைத்துவிடும். குழுக்களாக கடன்களைப் பெறும் நபர்கள் தமக்கு இடையிலேயே ஒருவருக்கொருவர் பிணையாளிகளாக உள்ளனர். இவ்விதம் குழுக்களாக ஒன்றிணையும் பெரும் எண்ணிக்கையான தமிழ் பேசும் பெண்கள் மன்னாரில் இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன்களைப் பெறும் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.

single photo
நுண் கடனிலிருந்து காப்பாற்றுங்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அவ்வாறான சந்திப்பு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம் இது.

ஆனால், இந்த நுண்கடன்களைப் பெறும் பெண்களிடம் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து எந்தவிதமான குறிக்கோள்களும் நோக்கங்களும் இல்லை.

நுண்கடன்களைப் பெறும் அதிக எண்ணிக்கையான பெண்களின் கணவன்மாருக்கோ அல்லது அந்தக் டும்பத்தைச் சேர்ந்த வேறு உறவினர்களுக்கோ அது குறித்து எதுவுமே தெரிவதில்லையென பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறினார்.

இவ்வாறு கடனாகப் பெறப்படும் பணத்தொகையை குறித்த நிதி நிறுவங்களுக்கு திருப்பிச் செலுத்தும் போது அதிக வட்டித் தொகையுடன் பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் சிலவேளைகளில் பணத்தை செலுத்த தவறினால், அத்தொகைக்கு மேலதிக வட்டி அறவிடப்படுவதாகவும் பாதிக்க்ப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி நிறுவனங்களில் நுன்கடனைப் பெற்றவர்கள் குறித்த கடன் தொகையை செலுத்துவதற்கு உறவினர்கள் நண்பர்களிடம் கடன் பெறுவதாகவும் வேறு நிதி நிறுவனங்களில் நுண்கடன்களைப் பெற்று முன்னைய கடன் தொகையை செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரில் இயங்கும் நிதி நிறுவனங்களின் கடன் அறவீட்டு ஊழியர்கள் தமது நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நுண்கடன் தொகையை அறவிடுவதில் கடும் போக்குடன் இருப்பதாகவும் கடனாளியான பெண்களிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாகவும் இரவு நேரங்களில் கடனாளிகளின் வீடுகளுக்கு சென்று தேவைற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

நுண்கடனைப் பெற்ற சில பெண்கள் கடனை திரும்பச் செலுத்த முடியாது குடும்பத்துடன் தலைமறைவாகியதுடன் ஒரு சில பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற அடிப்படையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கடன் திட்டங்களுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் மன்னார் நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.