தமிழர் தாயகத்தில் மன்னாரைத் தொடர்ந்து

யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலும் மண்டையோடுகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

இலங்கைப் பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2018 ஒக். 12 12:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 14 18:43
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சாட்சியாக ஈழத்தின் பல பகுதிகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுவருகின்றன. மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடு மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அதிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி - பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது கை, கால் மற்றும் மண்டையோடு என்பனவும் மனித எலும்புகள் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
 
எலும்புகள் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற இலங்கைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் எந்தக்காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது குறித்தும் அவை யாருடைய எலும்புக்கூடுகள் என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுகூடத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னாரில் சதொச கட்டடம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட காணியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் ஊடாக இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

169 மனித எலும்புக்கூடுகள் அகற்றப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருடையவையாக இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.