அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி

அநுராதபுரத்துக்குள் நுழைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி

கடும் மழையையும் பொருட்படுத்தாது இலக்கு நோக்கி தொடர்கின்றது பயணம்
பதிப்பு: 2018 ஒக். 12 21:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 14 18:42
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வழக்கு விசாரணைகளின்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடுதலை கோரிய நடைபவனி இலக்கு எல்லையான அநுராதபுரத்தின் எல்லையைச் சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டன நடைபவனியை ஆரம்பித்தனர்.
 
கண்டனப் பேரணி, ஏ9 வீதியுடாக கிளிநொச்சியைச் சென்றடைந்தது. இதற்கு ஆதரவாக கிளிநொச்சியில் 1 வருடத்துக்கும் மேலாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பிரதேச மக்கள், பொது அமைப்புக்கள் என பலரும் ஆதரவு வழங்கினர்.

தொடர்ந்து மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் ஊடாக நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது. இதன்போதும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், பொது அமைப்புக்கள் என பலரும் ஆதரவு வழங்கி நடைபவனியில் பங்கேற்றனர்.

வவுனியாவில் இருந்து மதவாச்சி நோக்கி மத குருமார், பொதுமக்களின் ஆதரவுடன் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நடைபவனி இன்று இடம்பெற்றது.

இன்றைய தினம் உள்ளுர் நேரப்படி மாலையளவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவனி அனுராதபுர எல்லையைச் சென்றடைந்ததாக, நடைபவனியில் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மல்லாவி அனிச்சங்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு தமது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.