அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி

நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் மிரட்டல்-

வழமைபோன்று வாக்குறுதியை நம்பி உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர் அரசியல் கைதிகள்
பதிப்பு: 2018 ஒக். 14 12:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 01:06
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் மக்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் மாபெரும் போராட்டங்கள் வலுப்பெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழ் மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் குழு ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வழமை போன்று வாக்குறுதியளித்துள்ளார்.
 
அதனையடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். இலங்கைச் சிறைச்சாலைகளில் வழக்கு விசாரணைகளின்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஐந்து நாட்களாக நடைபயணத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பாக வடக்கு- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாகச் செயற்பட முடிகின்றது.

அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

நீதிக்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.

எனவே, இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழியேற்படுத்த வேண்டும்.

தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, பாரபட்சமில்லாத நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மை பற்றியே சிந்தித்துச் செயலாற்றுகின்றோம்.

மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப் போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும் என பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த நடைபயணம் நேற்றுச் சனிக்கிழமை அநுராதபுரத்தைச் சென்றடைந்து.

பல்கலைக்கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை முன்பாக கூடியிருந்த போது, அரசியல் கைதிகள் என யாரும் இங்கே இல்லை என இலங்கையின் பெரும்பான்மையின இளைஞர்கள் ஐந்து பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் தர்க்கம் புரி்ந்தனர்.

சிறைச்சாலைக்கு முன்னால் அதிகளவான சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இலங்கைப் பொலிஸார் நின்றிருந்தபோது இரண்டு மகிழுந்தில் மது போதையில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர் குழு ஒன்று தர்க்கம் புரிந்ததாக மாணவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

சிறையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இங்கே உள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறி தகாத வார்த்தைகளை கூறியதுடன், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து தர்க்கம் புரிந்தபோது அங்கிருந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை சமாளித்து அழைத்துச் சென்றனர்.

அந்த இளைஞர்கள் மாணவர்களை அச்சுறுத்திய போது, இலங்கைப் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக சம்பவ இடத்திலிருந்தோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்தார்.

இதனைத்தொடர்ந்து தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக முன்னெடுத்தவந்த உண்ணாவிரதத்தை அரசியல்கைதிகள் கைவிட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி- ரணில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்றமை, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பாதயாத்திரை மற்றும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை போன்ற காரணிகளினால் தமிழ் அரசியல் கைதிகள் தற்காலிகமாக தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் தமது நலன்களை பெற்றுக்கொள்ள அழுத்தம் பிரயோகித்து வருவதாகவும் தமக்கு கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து பேசுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தும்போது, அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அழுத்தம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இன அழிப்பு போர் இடம்பெற்றதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யுமாறு ஆண்டுதோறும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தடவையும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அவர்களை விடுதலை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலி வாக்குறுதிகளை வழங்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகளது வாக்குறுதிகளை நம்பி விடுதலைக்காக காத்திருக்கின்றனர்.

எனினும் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் போன்று எவ்வித பயனும் கிடைக்கவில்லையென மாணவர்கள் கூறுகின்றனர்.