இலங்கை மலையகத்தில்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்கின்றது - முதலாளிமார் சம்மேளனம் மீது குற்றச்சாட்டு

சம்பள உயர்வு உடன்படிக்கை நேற்று நள்ளிரவுடன் நிறைவு, புதிய உடன்படிக்கை இழுபறியில்
பதிப்பு: 2018 ஒக். 15 15:31
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 21:08
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹட்டன் ஸ்டிரதன், மஸ்கெலியா கிலண்டில், கொட்டகலை மேபீல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்கள், ஆயிரம் ரூபாய்கள் அடிப்படை சம்பள உயர்வு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். முதலாளிமார் சம்மேளனத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
 
2016 ஆம் ஆண்டு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்யப்பட்டிருந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்த விதப்புரைகள் எதுவுமே உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களினால் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

உடன்படிக்கையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டிருந்தன.

இந்த உடன்படிக்கையின்படி, தேயிலை, ரப்பர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 620 ரூபாய்கள் தினசரி வேதனம் 730 ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் 18 கிலோகிராம் தேயிலையைப் பறிக்க வேண்டும் என கம்பனிகள் அழுத்தம் கொடுத்திருந்தன.

குறைவாக தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு வேதனம் குறைக்கப்பட்டு வந்தன. அத்துடன் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் 300 நாட்கள் வேலை என்ற உடன்பாடும் மீறப்பட்டிருந்தது.

இதனால் தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் முதலாளிமார் சம்மேளனம் அந்தப் போராட்டங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பு நடைமுறையை உரிய முறையில் பின்பற்றத் தவறியதாக, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு வழங்கப்பட்ட 25 ரூபாய் கொடுப்பனவும், றப்பருக்கான 30 ரூபாய் கொடுப்பனவும் 5 ரூபாவினால் முன்னைய உடன்படிக்கையின் படி அதிகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய்கள் வேதனமும், அதற்கான நிலுவையும் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டும் இருந்தது.

ஆனால், 2016 ஆம் ஆண்டின் புதிய உடன்படிக்கையில் நிலுவை கொடுப்பனவு பற்றி எந்த விடயமும் குறிப்பிடப்படிருக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுப் பேச்சு அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் இடையேயானதல்ல. அந்தப் பேச்சு முற்று முழுதாக தொழிற்சங்கத்துடன் தொடர்புடையது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதிலும் உள்ள அரச அலுவலர்களின் சம்பளம் அதிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மாத்திரம் அதே நிலையில் தான் காணப்படுவதாகவும் அமைச்சர், நேற்று அக்கரைப்பத்தனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.

புதிய உடன்படிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 25 ரூபாவால் உயர்த்துவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளது.

அடிப்படை சம்பளமாக 575 ரூபாவும், மேலதிக கொடுப்பனவுகளுமாக இணைத்து 936 ரூபாவை வழங்க முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வந்துள்ளது.

ஆனால், இதற்கு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மலையகத் தொழிற்சங்கங்கள் ஒருபோதும் உடன்பட்டு விடக்கூடாதென என சட்டதரணி இ.தம்பையா கூறியுள்ளார்.