இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவில்

சம்பந்தன் இரட்டை நிலைப்பாடு; ரணில், மைத்திரி, மஹிந்தவை சமாளித்தார் என்கின்றனர் அவதானிகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு என அவர் கூறியபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியேறியமை எதற்காக?
பதிப்பு: 2018 ஜூன் 06 12:25
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 21:38
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படலாம் என பரவலாக பேசப்படுவதால், அதற்கேற்ற முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயற்படுகின்றாரா என்பது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன. இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, பிரதி சபாநாயகர் தெரிவில் சம்பந்தன் செயற்பட்ட முறை குறித்து நாடாளுமன்றத் தமிழ்ச் செய்தியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி புதன்கிழமை சம்பந்தனை சந்தித்து உரையாடியிருந்தனர். புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் என்ற பெயரில் இணைந்து செயற்படுவது மற்றும் ஆட்சிமாற்றம் குறித்து சந்திப்பில் பேசப்பட்டிருந்தன.

மேற்குலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சம்பந்தன் வழிநடத்திச் செல்கின்றாரா என்பது குறித்து அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களும் சம்பந்தனை கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தனர். இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவின்போது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சம்பந்தன், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளேக்கும் அவர் ஆதரவு வழங்கியிருந்தார். இவ்வாறு ஆதரவு வழங்கி சம்பந்தன் உரையாற்றியபோது, மாவை சேனாதிராஜா உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகவே சபையை விட்டு வெளியேறிவிட்டனர்.

அவர்கள் வெளியேறியமை சம்பந்தன் கூறியதற்கு எதிராகவா அல்லது என்ன காரணம் என்பது குறித்து, வெளியேறிய உறுப்பினர்கள் எவரும் இன்று புதன்க்கிழமை வரை ஊடகங்களுக்கு கருத்துக் கூறவில்லை.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயரை, கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்தபோது ஏன் எதிர்ப்பு வெளியிட்டிருந்தீர்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தனிடம் சபையில் கேள்வி தொடுத்திருந்தார்.

ஆனால், அந்தக் கேள்விக்கு சம்பந்தன் பதிலளிக்கவேயில்லை. மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த அரசாங்கம் பதவியேற்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சம்பந்தன் கூறினார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நெருங்கிய உறவு வைத்துள்ளனர் என்பது பகிரங்கமாகத் தெரிந்ததுதானே என்று கூறிய கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கியதேசியக் கட்சியையும் சமாளிக்கும் அரசியல் நாடகம் ஒன்றை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரதி சபாநாயகர் தெரிவில் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால். மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணி வெற்றிபெறலாம் என்ற எதிர்பார்ப்பு, இலங்கைத் தீவிலும் மற்றும் வெளிச் சக்திகள் மத்தியிலும் நிலவுகின்றது.

இந்த நிலையில் அதற்குரிய அரசியல் அணுகுமுறையில், சம்பந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வழிநடத்திச் செல்கின்றார் என்றும் மேற்குலகநாடுகளின் தேவைக்கு ஏற்ப, அந்த நாடுகளின் யோசனைகளையும் அவர் செவிமடுக்கின்றாரா என்பது தொடர்பாகவும் கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா ஆகியோரையும் உள்ளடக்கிய ஆலோசனைக்குழு ஒன்றை கட்சியின் செயற்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை மாலை மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

ஆகவே, தென்னிலங்கையை மையப்படுத்திய சிங்கள அரசியல் கட்சிகளின் மாற்றங்களுக்கும் அவர்களின் பேரினவாத போக்குகளுக்கும் ஏற்ப வளைந்து கொடுக்கின்ற அரசியல் நகர்வுகளிலும் மேற்குலக நாடுகளின் தேவைக்கு ஏற்றவாறும் சம்பந்தன் செயற்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மொனரகல மாவட்ட உறுப்பினர், ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளை பெற்று இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார். இந்த வாக்கெடுப்பில் சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவேயில்லை.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் சர்ச்சைப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த மாதம் வலகியிந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியையும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.