இலங்கை ஒற்றையாட்சி அரசின் மறுப்பு

சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் எதுவும் இல்லை என்கிறது அலுவலகம்

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென உறவினர்களும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 ஜூன் 07 15:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 18:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இறுதிக்ககட்ட யுத்தத்தில் சரணடைந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக உறுதியளிக்கவில்லையென கொழும்பில் இயங்கும், இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலகம், மறுப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் எதுவும் தம்மிடம் இல்லையென்றும் குறித்த அலுவலகம் அறிவித்துள்ளது.
 
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை கண்டறியும் அலுவலகத்தின் தவிசாளர் இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்திவு செயலகத்தில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.

அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒரே குரலில், சட்டத்தரணி சாலிய பீாிஸிடம் கூறியிருந்ததாகவும் அவர் தற்போது வெளியிட்ட மறுப்பு, தாங்கள் கூறியதை நியாயப்படுத்தியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எழுத்துமூலம் அறிவித்தால், இலங்கை படை உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்றும் அவர் உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.

சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவ்வாறு கூறியதை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் அவ்வாறு எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என சட்டத்தரணி சாலிய பீரிஸ் தற்போது மறுத்துள்ளார்.

சரணடைந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் தமது அலுவலகத்தில் இல்லையென்று மாத்திரமே சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியதாக. குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ், உறுதியளித்தார் என்று முல்லைத்தீவில் உள்ள அரச அதிகாரி ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை கையளிக்க இலங்கை படை உயர் அதிகாரிகள் விரும்பவில்லை என்பதால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளதாக கொழும்பு அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை கண்டறியும் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, மே மாதம் 27ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

இந்த நகல் சட்ட மூலம் 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்த சட்டமூலத்தில் கூறப்பட்டிருந்த வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகள் மற்றும் வெளிநாட்டு ஆலோசனைகளை பெறுவது என்ற வாசகம். ஜே.பி.வியின் அழுத்தத்தினால், நீக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், 1983-2009 போர்க்காலத்தில், சுமார் 20 ஆயிரம் பேர் காணாமல் போனதாக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணைக்குழுவி்ன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இறுதி யுத்தத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசப், ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வழங்கிய சாட்சியத்தில் கூறியிருந்தார். இது தமிழ் இன அழிப்பு போர் என்றும் ஆயர் வர்ணித்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான அலுவலகத்தின் அமர்வு, சட்டத்தரணி, சாலிய பீரிஸ் தலைமையில் முல்லைத்தீவில் கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு செயலக வளாகத்துக்குள் நுழைந்தபோதே, சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களை சந்தித்திருந்தார்.

அவ்வாறு சந்தித்தபோதுதான், இலங்கை படையினரிடம் சரணடைந்த மற்றும் காணமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாக அவர் உறுதிமொழி வாழங்கினார் என்று உறவினர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகத்தில் நம்பிக்கையில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒரே குரலில், சட்டத்தரணி சாலிய பீாிஸிடம் கூறியிருந்ததாகவும் அவர் தற்போது வெளியிட்ட மறுப்பு, இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென தாங்கள் கூறியதை நியாயப்படுத்தியுள்ளதாகவும் உறவினர் ஒருவர் மேலும் குறிப்பிட்டார்.