மாடிக்குடியிருப்பு திருத்தும் பணியில் கோளாறு

பெரிய நீலாவணை சுனாமிக் குடியிருப்பு மீள்நிர்மாணத்தில் பொலிஸ் பாகுபாடு

வாக்குவாதம் அடிதடியில் முடிந்து 72 மணிநேரம் கடந்தும் நடவடிக்கை இல்லை
பதிப்பு: 2018 ஜூன் 07 20:03
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 22:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டு நகருக்குத் தெற்காக 39 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பெரியநீலாவணையில் சுனாமியின் பின்னர் அமைக்கப்பட்ட தொடர் மாடிக் குடியிருப்பொன்றின் தலைவரான தன்மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 72 மணிநேரம் கடந்தும், தனது முறைப்பாடு தொடர்பாக கல்முனைப் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தாக்குதலுக்குள்ளான சின்னையா சத்தியமூர்த்தி கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார். பொலிஸார் அரசியற் பின்னணியில் சமூக ரீதியாகப் பாகுபாடான முறையில் இயங்குகிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
 
சுழற்காற்றினால் சேதமடைந்த மக்கள் குடியிருக்கும் தொடர்மாடிக் கட்டடத்தின் புனரமைப்புப் பணியில் குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டடியபோதே திரு சத்தியமூர்த்தி மீது கடந்த செவ்வாய்கிழமை (05.06.2018) தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடிக்குடியிருப்பு கட்டடத்தின் கூரைகள் கடந்த 28.02.2018 அன்று வீசிய கடும் சுழற்காற்றினால் சேதமடைந்திருந்தன.

இந்தக் கூரைகளைத் திருத்தும் பணியை பெரியநீலாவணை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் மூலம் செய்வதற்கு மாவட்டச் செயலக மட்டத்தில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும் இது குறித்து எழுந்த விமரசனங்களைத் தொடர்ந்து கட்டுமான வேலை ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு வேலைகளும் ஆரம்பமாயின.

புனரமைப்புப் பணியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கிராம சேவகர் மற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடைநடுவில் வந்த நபர் ஒருவருக்கும், கோப்பரேசன் குடியிருப்புத் தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே கைகலப்பில் முடிவடைந்தது.

காயமடைந்த கோப்பரேசன் குடியிருப்புத் தலைவர் மருதமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலை அதிகாரிகள் கல்முனைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தாக்குதல் மேற்கொண்ட நபர் மாடி குடியிருப்பில் இருந்து தகரங்கள், மரங்களைக் களவாடி விற்பனை செய்துள்ளதாக சத்தியமூர்த்தி குற்றஞ்சாட்டியபோது எழுந்த வாக்குவாதமே அடிதடியில் முடிவடைந்திருக்கிறது.

இச்செயற்பாடுகள் தொடர்பாக பலதடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டும், அரசியற் பின்புலக் காரணங்களினால், குறித்த நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்ட இரண்டு கிராம சேவகர் பிரிவு மக்களுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட 648 வீடுகளைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு இதுவாகும். இவற்றில் 246 வீடுகளின் கூரைகள் சூறாவளியினால் சேதமடைந்திருந்தன.