மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் இந்திய இலங்கை உறவு

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கொழும்புக்கு இரகசியமாக வந்து சென்றதன் பின்னணி?

மைத்திாிபால சிறிசேன. ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து விட்டு டில்லிக்குத் திரும்பிவிட்டார்
பதிப்பு: 2018 ஜூன் 08 00:27
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 08:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கு வந்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துவிட்டு சென்றுள்ளதாக அமைச்சரவையின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய வருகை குறித்து கொழும்பு அரசியலில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவருடைய வருகை திடீரெனவும் இரகசியமாகவும் அமைந்ததாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
திங்கட்கிழமை காலை கொழும்புக்கு வந்த நரேந்திர மோடிக்கு நொருக்கமான அந்த அரசியல் செயற்பாட்டாளர் அன்றைய தினமே புதுடில்லி திரும்பிவிட்டார். ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்க (Rashtriya Swayamsevak Sangh) எனப்படும் ஆர்.எஸ். எஸ்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த, ராம் மாதவ் வணராசி என்பவரே இரகசியமாக கொழும்புக்கு வந்து சென்றதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ராம் மாதவ் வணராசி, தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராகவும் பணியாற்றுகின்றார். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நீண்டகாலமாக செயற்பட்டு வருவதுடன் பல நூல்களையும் எழுதியவர் எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் தகவல் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்ததாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.

அடுத்த ஆண்டு முற்பகுதியில், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மைத்திரி, ரணில் ஆகிய இருவரிடையேயும் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன. மறுபுறத்தில் மஹிந்த ராஜபக்சவின் அணியும் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர் ஒருவர் கொழும்புக்கு வந்து சென்றுள்ளார். ஆனால். ராம் மாதவ் வணராசி கொழும்புக்கு வந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து சென்றமை தொடர்பாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதையும் கூறவில்லை.

இலங்கையின் ஒற்றையாட்சி முறையை மேலும் அங்கீகரிக்கும் வகையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை உட்னபடிக்கை மூலம் மாகாண சபைகள் முறை உருவாக்கப்பட்டது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டமாக மாகாண சபைகள் முறை இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழர் தாயக பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இணைப்பு இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டிருக்கவில்லை.

மாறாக, இலங்கை நிறைவேற்று ஜனாதிபதியினால் ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிடப்பட்டு, இணைப்பு தற்காலிகமாக நீடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அந்த இணைப்பு இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு முரணானது என விளக்கமளிக்கப்பட்டு, இலங்கை உயர் நீதிமன்றத்தால் 2006 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களும். அமெரிக்க, சீன அரசுகளின் படை உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு வந்து சென்றிருந்த நிலையில், மோடியி்ன் நெருங்கிய நண்பன் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஷட்ரிய சுயம்சேவாக் சங்க 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது. இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS) தேசிய தொண்டர் அணி எனவும் அழைக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தற்போது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களில் செயற்பட்டு வருகின்றது.

தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது.