போரில் தன்னுயிர் ஈந்த முன்னாள் போராளியின் மனைவி மீது கத்திக்குத்து

திருகோணமலை வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் ஐந்து பிள்ளைகளின் தாய்

இலங்கைக் காவல்துறை மௌனம்; சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
பதிப்பு: 2018 ஜூன் 08 00:36
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 07:15
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
திருகோணமலையின் மூதூர் பாட்டாளிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெண்ணொருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். ஐந்து பிள்ளைகளின் தாயான அவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதுவரை அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
திருகோணமலையில் மாவிலாறு முரண்பாட்டைச் சாட்டி போர் நிறுத்தத்தை மீறி இலங்கை அரசு தொடுத்த போர் நடவடிக்கையின் போது தன்னுயிர் ஈந்த போராளி ஒருவரின் மனைவியான திருமதி தர்மன் ராணி என்பவரே கத்திக்குள்ளான பெண்மணி.

ராணியின் உயிரைக் காக்க வைத்தியர்கள் கடும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.

இக் கொலைமுயற்சிக்கான பின்னணி என்னவென்பது தெளிவாக அறியப்படவில்லை.

நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இலங்கைக் காவல் துறையினரால் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இக் கொலைமுயற்சியுடன் தொடர்புடையவர் என அப்பிரதேச மக்களால் சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கைக் காவற்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொலைமுயற்சிக்கான கண்டனத்தைத் தெரிவிக்கும் பொருட்டும் உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 9 ம் திகதி காலை 9 மணிக்கு பாட்டளிபுரம் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது.