தமிழர் தாயக பிரதேசங்களில் பொருளாதார சுரண்டல்

வடமராட்சி கிழக்கில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல், தடுத்து நிறுத்துமாறு கோரி முற்றுகைப் போராட்டம்

இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் கடல்அட்டை பிடிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஜூன் 08 17:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 21:50
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், இலங்கை படையினரின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக தங்கியிருந்து கடல் அட்டை தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலங்கையின் தென்பகுதி சிங்கள மீனவர்களை வெளியேற்றுமாறு கோரி, இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை முற்றுகையிட்டு போராட்டம் இடம்பெற்றது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசாங்கத்தின் தமிழர் தாயக பிரதேசங்கள் மீதான பொருளாதார சுரண்டல்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரா்கள் ஒன்று திரன்டு குரல் எழுப்பினர்.
 
வடமராட்சி கிழக்கில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு கடற்தொழில் ஈடுபடும் சுமார் 1500ற்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் வெளியேற வேண்டுமென வலியுறுத்தி, தொடர்ச்சியான போராட்டங்களை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று வடமராட்சி கிழக்கு மீனவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பிரதேச மக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் கதவுகளை மூடி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனால் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலையில் வீதியில் நின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், 'நீரியல்வளத்துறை திணைக்களமே சட்ட திட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்து' 'எமது கடல்வளம் எமது மக்களுக்கே' 'கடல் அட்டை பிடிக்கும்போது உண்டாகும் பாதிப்புக்களுக்கு யார் பொறுப்பு?' என கேள்விகளை தொடுத்து கோஷங்களை எழுப்பினர். சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் இறுதியில் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சட்டத்திற்கு முரணாக வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கடல் அட்டை தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்க வேண்டாம் எனவும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையானால், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் போராட்டம் இடம்பெறும் என்றும் மீனவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், தமிழர் தாயக பிரதேசங்களில் இலங்கை படையினரின் ஒத்துழைப்புடன் சிங்கள குடியேற்றங்கள், மீன்பிடி தொழில் உட்பட தமிழர்களின் பொருளாதார வளங்களை கையகப்படுத்தும் செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றது.

நல்லாட்சி என தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் மைத்திரி ரணில் அரசாங்கம் கூட, தமிழர் தாயக பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியிருந்தார்.

அதேவேளை கொழும்பு அரசாங்கத்துக்கு முன்டுகொடுத்துக் கொண்டு, மீனவர்கள் நடத்தும் போராட்டத்தில் சிலர் பங்குகொண்டு அரசியல் லாபம் தேடுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பண்ணீர்ச் செல்வம், 2010ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறுதான் செயற்பட்டது என்று பதிலுக்கு கூறினார்.

இதனால் இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றியது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தாத்தன் ஆகியோர் அமைதியாக இருந்தனர்.