ஊழல் மோசடியில் சில அரச அதிகாரிகள்

மட்டக்களப்பு காயாங்கேணி வீட்டுத் திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி, மக்கள் பரிதவிப்பு

மூன்று வருடங்கள் கடந்தும் யாரும் பொறுப்புக் கூறவில்லையென்கிறார் பிரதேச சபை உறுப்பினர்
பதிப்பு: 2018 ஜூன் 08 19:52
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 23:26
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு காயாங்கேணி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச சபை உறுப்பினர் மெத்திஸ் அன்டன் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட காயாங்கேணி கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் மூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் பூர்த்தியடையவில்லை எனவும் அவர் கூறினார்.
 
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி கிராமம் மட்டு நகருக்கு வடக்காக 47 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கடலோரக் கிராமமாகும்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்களுககும் வீடமைத்துக் கொடு்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் 2015ஆம் ஆண்டு பதவியேற்ற மைத்திரி ரணில் அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசாங்கத்தில் பணியாற்றும் கொழும்பில் உள்ள சில அதிகாாிகள் மற்றும் சில அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளினால், வீடமைப்புத் திட்டத்தை உரிய முறையில் செய்து முடிக்கமுடியவில்லை என காயாங்கேனி பிரதேச அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிராமத்தில் பணிபுரியும் வேறு சில அரச அதிகாரிகள் கொழும்பு அரசியல் ஊடான செல்வாக்குகளின் அடிப்படையில் ஊழல் மோசடிக்குத் துணைபோவதாகவும், இதனால் சுனாமிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய விடமை்ப்புத் திட்ட பணிகள் தாமதமடைவதாகவும் பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 75 வீடுகள் ஒவ்வொன்றும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியானது. இவற்றில் ஒரு இலட்சம் ரூபா மானிய அடிப்படையிலும், மற்றைய ஒரு இலட்சம் ஐந்து வருடத்திற்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான கடன் உதவித் திட்டத்திற்குரிய சிபாரிசு செய்யும் முழுப்பொறுப்பும் கிராம சேவகருக்குரியது. அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்களின் வீட்டுத் திட்டங்களுக்குரிய நிதியும் உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதை தாம் அறிந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் வீடுகள் எதுவும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்வில்லை என்றும் இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு யாரால் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய முடியாமல் உள்ளதாகவும் பிரதேசத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பொதுமக்கள் தமது சொந்த முயற்சினால் தங்களுக்குரிய வீடுகளை கட்டிமுடித்துள்ளனர். இக்கிராமத்திற்கு மூன்று பொது கிணறு கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய கிணறுகள் அமைக்கப்படாது பழைய கிணற்றை திருத்தம் செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் மெத்திஸ் அன்டன் தெரிவித்தார்.

இந்தக் கிராம மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று நிதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு மலசலகூடம் அமைக்க 75 ஆயிரம் ரூபா என கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவித்திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் செய்யப்படுமாயின், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு உயர் அதிகாரிகளின் செல்வாக்கைப் பெற்ற பிரதேசத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் மக்களை அச்சுறுத்தியுமுள்ளார்.

ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக வாகரை பிரதேச சபை அமர்வின் போது பிரஸ்தாபிக்கவுள்ளதாக தெரிவித்த மெத்திஸ் அன்டன், ஊழல் மோசடிகள் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெறும் என்றும் கூறினார்.

வீட்டுத் திட்ட பணிகள் தாமதமடைகின்றமைக்கு கொழும்பு அதிகாரிகள் உட்பட யாரும் பொறுப்புக் கூறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.