போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து வரும் இலங்கைப் பொலிஸார்

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு, கஞ்சா விற்பனை செய்தவர் பலியென மக்கள் கூறுகின்றனர்

தென்பகுதியில் இருந்தும் கஞ்சா கொண்டு வரப்படுவதாக முறைப்பாடு
பதிப்பு: 2018 ஜூன் 09 11:35
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 09 17:12
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிப் பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என காத்தான்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துவோர் தொடர்பாக பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கையின் தென்பகுதியில் இருந்து காத்தான்குடி உள்ளிட்ட கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும் அதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
 
காத்தான்குடி டீன் வீதி அலியார் சந்திக்கு அருகில் தேனீர் கடை உரிமையாளர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் காத்தான்குடி அலியார் சந்தியில இச்சம்பவம் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார். உயிரிழந்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் என அடையாளம் காண்பட்டுள்ளார்.

காத்தான்குடி பகுதியில் புகைத்தல் வகைகளை விற்பனை செய்யக் கூடாது என காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்தல் செய்த பின்னர், சில கடைகளில் புகைத்தல் வகைகள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது உயிரிழந்த ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காத்தான்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கஞ்சா விற்பனை செய்வபர்களிடையே ஏற்பட்டு வரும் போட்டியினால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காத்தான்குடி கடற்கரையோரமாக உள்ள கடைகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இரகசியமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்துவதற்காக காத்தான்குடி பொலிஸாரின் இரகசியப் பிரிவு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகின்ற போதிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏனெனில் சில பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் உறவை பேணுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.