யாழ் மீனவர்களின் தொடர் போராட்டம்

கடலட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள தொழிலாளர்களை வெளியேற்றுமாறு கோரி யாழ் மீனவர்கள் பேரணி

செயலகத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரா்கள், ஆளுநரிடமும் மகஜர் கையளித்தனர்
பதிப்பு: 2018 ஜூன் 11 15:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 12 10:51
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைப் படையினரின் உதவியுடன், வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் 1500 பேரை வெளியேற்றுமாறுகோரி, கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புறக்கணித்தனர். கலந்துகொள்வதற்காகச் சென்ற தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
 
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்தரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அவர்களை வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின், கொழும்பில் உள்ள உயர் அரச அதிகாரிகள் சிலரும் சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர் தாயக பிரதேசங்களில். இலஞ்சங்களை இலங்கைப் படையினர் ஊடாக அறிமுகப்படுத்தி நிர்வாகத்தை சீரழிப்பதாகக் குற்றச்சாட்டு.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் பலாத்காரமாக தங்கியிருந்து கடலட்டை தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் யாழ் நகரில் உள்ள கடற்றொழிலாளர் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமை காலை 9.30க்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான மீனவர்கள், பிரதான வீதியால் பேரணியாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தனர்.

அங்கு ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், மகஜர் ஒன்றை கையளித்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அங்கும் மகஜர் ஒன்றை கையளித்தனர். ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மகஜரை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு முன்பாகக் கூடிய மீனவர்கள், தென்பகுதி சிங்கள தொழிலாளர்களை வெளியேற்றுமாறு கோஷம் எழுப்பினர்.

தென்பகுதி சிங்கள மீனவர்களிடம் இலஞ்சம் வாங்காதே என்றும் யாழ் கடற்றொழில் பணிப்பாளர் பதவி விலக வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பினர்.

கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர், கடல் அட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள தொழிலாளர்களிடம் பெருமளவு பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக, போராட்டத்தில் ஈடுபட்ட வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் கூர்மைச் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

ஆனால், இலஞ்சம் பெறப்படவில்லையென பணிப்பாளரும் மறுத்துள்ளார்.

எனினும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின், கொழும்பில் உள்ள உயர் அரச அதிகாரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில். இலஞ்சங்களை இலங்கைப் படையினர் ஊடாக அறிமுகப்படுத்தி நிர்வாகத்தை சீரழிப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.