மைத்திரி ரணில் அரசாங்கத்தின் கடன் சுமை

மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் கடன் என்கின்றார் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன

கணக்காய்வாளர் நாயகத்தின் விபரங்களில் குழறுபடி என கூறுகின்றார் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
பதிப்பு: 2018 ஜூன் 12 17:23
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 12 21:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன்களைப் பெற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்ச மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியில் ஏழு ரில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டுக் கடனாகப் பெறப்பட்டிருந்ததாகவும், ஆனால் மைத்திரி ரணில் அரசாங்கம் மூன்று வருடத்தில் இவ்வளவு கடன்களைப் பெற்றதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடடில் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்
 
அதேவேளை, நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மே மாதத்தில் மாத்திரம் 800 மில்லியன் ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கையைச் சீரழிக்கும் வரிச் சுமை என்ற தொனிப் பொருளில் கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை இரகசியமாக வெளியிடப்பட்டதாக கூறுகின்றார் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்க்ச 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது வெளிநாட்டுக் கடன் தொகை இரண்டு ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது.

இந்தக் கடன், 2014 ஆம் ஆண்டு ஏழு ரில்லியன் ரூபாய்களாக உயர்வடைந்தது. எனினும் மஹிந்தவின் ஆட்சியின் போது இலங்கையில் பல்வேறு பொருளாதார அபிவிருத்திகள் இடம்பெற்றதாக பந்துல குணவர்த்தன செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.

ஆனால் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் தமிழர் தாயகப் பகுதியில் நடத்தப்பட்ட யுத்தத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டுக்கடன் மற்றும் செலவுகள் பற்றி பந்துல குணவர்த்தன எதையுமே கூறவில்லை.

மாறாக, மைத்திரி ரணில் அரசாங்கம் மீதே குற்றம் சுமத்தியதாக ஊடவியலாளர் மாநாட்டில் பங்குபற்றிய செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், மைத்திரி- ரணில் அரசாங்ககத்தின் கீழ் இயக்கப்படும் இலங்கை மத்தி வங்கி வெளியிட்ட வருடாந்த அறிக்கை, உண்மைக்கு மாறானது என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாறும்போது இலங்கையின் கடன் சுமை ஏழாயிரத்தி 300 பில்லியன் ரூபாய்களாக இருந்தது. ஆனால் அது கடந்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரத்தி 300 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. இம்முறை இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

மாறாக, இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் மாத்திரமே அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அறிக்கை வெளியிடும்போது புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் எல்லோரும் அழைக்கப்படுவார்கள். ஆனால் மைத்திரி ரணில் அரசாங்கம் அவ்வாறு மத்திய வங்கி அறிக்கையை வெளியிடவில்லை.

இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட குறிப்புக்களில் உள்ள கடன் தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அது இன்னும் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்

இதன் காரணத்தினாலேதான் இலங்கை மத்திய வங்கி அறிக்கை இரகசியமாக வெளியிட்டிருக்கின்றது எனவும் அஜித் நிவாட் கப்ரால் அந்தக் கருத்தரங்களில் உரையாறும்போது மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அடுத்த நிதியாண்டு 4.3 பில்லியன் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாத இறுதியில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது. அதனை இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரவும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியிந்தார்.

அதேவேளை, 252 மில்லிய்ன அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் 30 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர், கடன் சுமைகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை தொடர்பாக கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை மைத்திரி ரணில் அரசாங்கத்தில் இருந்து பதில் வெளியாகவில்லை.

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில் யுத்தத்தின் பக்க விளைவுகளுக்குக் கூட மைத்திரி- ரணில் அரசாங்கம் சரியான தீர்வை முன்வைக்கவில்லை என்றும் ஒதுக்கப்படும் நிதி போதுமானது அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழர் தாயக பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.

வசதி குறைந்தவர்கள் தொழில் ஒன்றை பெறுவதற்கு ஆக்கிரமிப்பு இராணுவமாக ஈழத்தமிழர்கள் கருதும் தரப்பிடமே கையேந்த வேண்டிய வேண்டிய கட்டாய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒற்றையாட்சியை நிலை நிறுத்துவதற்கான பேரினவாதிகளின் திட்டமிடப்பட்ட செயல் என்று சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.