2009 இன் பின்னரான இந்தோ - பசுபிக் புவிசார் அரசியல், பொருளாதாரப் போரட்டி-

இந்தியாவின் இரட்டைக் கொள்கையும் பிறிக்ஸ் மாநாடும்

இலங்கை தொடர்ந்தும் செல்லப்பிள்ளையாக இருக்கும்- ஈழத்தமிழர்களின் வலியும் நீடிக்கும்
பதிப்பு: 2023 ஓகஸ்ட் 07 07:50
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 31 07:58
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#india
#us
#china
பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் பலவற்றில் இந்தியா உடன்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை, இருந்தாலும் பிறிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ நாடான சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடு என்ற அணுகுமுறையை உருவாக்கிச் செயற்படுத்த இந்தியா திரைமறைவு நகர்வுகளில் ஈடுபடுகின்றது. ரசியாவுடன் மரபுவழி உறவின் மூலமாக சீனாவுடன் அணுகும் முறையை இந்தியா ஏற்கனவே பின்பற்றியிருந்தாலும் பிறிக்ஸ் நாடுகளிடையேயான பொதுநாணய உருவாக்கத்தில் இந்தியா உடன்பட மறுத்த பின்னரான சூழலில் பிறிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது.
 
இந்தியாவின் இரட்டைப் போக்கு அரசியல் நன்கு தெரிந்த நிலையிலேதான் சீனா இந்தியாவைக் கிண்டலாகப் பார்க்கிறது. ரசியாவும் இராணுவ ரீதியாக இந்தியாவைப் பலப்படுத்த  விரும்பவில்லை. இந்தியாவுக்கும் சீனாவைிட ரசியா பற்றிய முன் எச்சரிக்கை இல்லாமலில்லை

"இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் தகுதியின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகின்றது. இதனால் இந்தியாவுக்குப் பிறிக்ஸ் நாணயம் தேவையில்லை. அப்படியொரு பொது நாணயப் பயன்பாடு பற்றி இந்தியா உரையாட விரும்பவில்லை" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதுடில்லியில் செய்தியாளர் மாநாட்டில் விபரித்ததாக ரைம்ஸ்ஒப்இந்தியா (timesofindia) நாளிதழ் கூறுகிறது.  

பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இந்தியா, நல்லுறவைக் கொண்டுள்ளது. இன்னும் வெளியிடப்படாத பிறிக்ஸ் நாணயத்தை நம்பி, மேற்கத்திய நாடுகளுடன் தனது வர்த்தக உறவைப் பணயம் வைக்க இந்தியா விரும்பவில்லை என்று ரைம்ஸ்ஒப்இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.  

உலக விவகாரங்களில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை ஈடுகட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிறிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து சீனாவும் ரசியாவும் கடந்த சில வாரங்களாக மிகத் தீவிரமாக விவாதித்து வருகின்றன.

குறிப்பாகப் பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் அதிக உறுப்பு நாடுகளை ஏற்றுக்கொள்வது என்று சீனாவும், ரசியாவும் முனவைத்த பரிந்துரைகளுக்கு இந்தியா சில வரையறைகளை விதித்துள்ளது. 

இது குறித்து சென்ற வியாழக்கிழமை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுடன் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாரயதாக ரைம்ஸ்ஒப்இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உரையாடலின் பின்னரே பிறிக்ஸ் கூட்டமைப்புக்குள் சற்று விரிசல் உருவாகியுள்ளது. 

பிரேசில், ரசியா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய பிறிக்ஸ் கூட்டமைப்பு 2010 இல் தென்னாபிரிக்காவை சேர்த்ததிலிருந்து அதன் செயற்பாடுகள் விரிவடையவில்லை என்ற கடும் விமர்சனங்கள் உறுப்பு நாடுகள் மத்தியில் உண்டு. 

இப் பின்னணியில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. சீனாவும் ரசியாவும் கையாளும், பரந்த தேசிய வளங்களை மையமாகக் கொண்டு சேர விரும்பும் இந்த நாடுகள், தமக்குரிய பொருளாதாரப் பலன்களையே கூடுதலாக எதிர்பார்க்கின்றன.

ஆனால் இந்த நாடுகள் பிறிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்தால் அமெரிக்க மேலாதிக்கத்திற்குச் சீனாவும் ரசியாவும் மேலும் சவால்விடும் நிலை உருவாகும். இதன் காரணமாகவே புதிய உறுப்பு நாடுகளைச் சேர்க்கும் சீன - ரசிய நகர்வுக்கு இந்தியா சில வரையறைகளை விதித்துள்ளது என்பது கண்கூடு.    

ஆகவே மாநாடு ஆரம்பிப்பதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் இந்தியா மீண்டும் தன்னுடைய இரட்டைக் கொள்கையைப் பகிரங்கப்படுத்துகின்றது போல் தெரிகிறது.

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சார்ந்து நிற்பதா அல்லது சீனாவையும் ரசியாவையும் மையப்படுத்திய அரசியல் பொருளாதாரக் கூட்டில் நிற்பதா என்று இந்தியா இதுவரையும் முடிவெடுத்ததாகக் கூற முடியாது.

ஆனால் மிகச் சிறிய தீவான இலங்கை, அமெரிக்கா அல்லது சீனா ஆகிய இரண்டிலும் ஏதேனும் ஒன்றிடம் முழுமையான பிடியில் சிக்கிவிடாமல் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான உத்தியை மாத்திரம் இந்தியா கன கச்சிதமாக வகுத்து வருகிறது.  

1983 இல் இந்திரா காந்தி காலத்தில் அணிசேராக் கொள்கை என்று கூறிக் கொண்டு அப்போதைய சோவியத் யூனியன் நாட்டுடன் இந்தியா திரைமறைவில் உறவைப் பேணியிருந்தது. அன்று ஆரம்பித்த இந்தியாவின் இந்த இரண்டு வகையான சர்வதேசக் கொள்கை இன்றுவரை தொடருகின்றது. 

குறிப்பாகச் சீனாவுடன் அதிகளவு வர்த்தக உறவுகள் மற்றும் ரசியாவுடன் அரசியல் இராணுவ உறவுகள் ஆகியவற்றைப் பேணிக் கொண்டு அமெரிக்க மேற்குச் சார்பு நிலையையும் இந்தியா பின்பற்றுகிறது.

புதுடில்லியில் உள்ள சில பிரதான ஊடகங்கள் இந்தியாவின் இக் கொள்கையை நியாயப்படுத்தி உலக அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் முன்னுதாரணமாகவும் சித்தரிக்க முற்படுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக வல்லரசு அந்தஸ்தை அனுபவித்த அமெரிக்கா, இன்று பிறிக்ஸ் கூட்டமைப்பினால் சவாலுக்கு உள்ளாகி வருகிறது என்பது உண்மை. குறிப்பாக 2050ஆம் ஆண்டுக்குள் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இலக்குடன் பிறிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சீன - ரசிய கூட்டு இதற்கு முதன்மைக் காரணி என்பது புதுடில்லிக்குப் புரியாததல்ல.

பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படும் பொருளாதாரம் தொடர்பான முழுமையான உடன்பாட்டுக்கு இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் விஞ்சியுள்ளன. ஆனால் இந்தியாவின் இத் தளம்பல் நிலை இலங்கைக்கு அரசியல் பொருளாதார ரீதியில் மேலும் சாதகமான சூழலை உருவாக்கும். குறிப்பாக சீன - இந்திய அரசுகளின் செல்லப் பிள்ளையாக இலங்கை தொடர்ந்து பயணிக்கும்
  அதேநேரம் பிறிக்ஸ் மாநாடு பற்றி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்திருப்பதை சா்வதேச நாளிதழ்கள் செய்தி இணையத் தளங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. உலகப் பொருளாதார அமைப்பியல் மாறி வருகின்றது. ரசிய - உக்ரெயன் போர் மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகளாவிய அரசியல் - பொருளாதார அதிகார சமநிலையும் குழப்பமடைந்துள்ளது. 

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தும் நிதி முறைக்கு பிறிக்ஸ் கூட்டமைப்பு, மாற்றாக இருக்கும் என்று பிறிலினியர் சிற்றங் என்ற (The Berliner Zeitung) ஜேர்மன் நாளிதழ் தெரிவிக்கின்றது. 

பிறிக்ஸின் இலக்கு டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கண்டுபிடிப்பதாக இருக்க முடியாது. ஆனாலும் டொலர் பயன்பாட்டை பிறிக்ஸ் விரும்புவதாக இல்லை என்று உலகப் பொருளாதார உறவுகளின் நிபுணரும் ஆலோசகருமான கலாநிதி டான் ஸ்டெய்ன்போக் (Dr. Dan Steinbock) கூறியதாக ஜேர்மன் நாளிதழ் விபரிக்கிறது. 

அதாவது தற்போதைய உலகப் பொருளாதாரத்துடன் ஒத்துப்போகும் பணவியல் அமைப்பின் பல்வகைப்படுத்தல் பற்றி பிறிக்ஸ் கூட்டமைப்பு முடிவு செய்யக்கூடிய ஏது நிலை இருப்பதாகவே அந்த நாளிதழ் பலமாக நம்புகிறது.  

பிறிக்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற இருபது நாடுகள் விரும்புகின்றன. இலங்கை போன்ற சில சிறிய நாடுகளும் பிறிக்ஸ் நாடுகளின் பொருளாதார வியூகங்களுக்குள் இந்திய ஒத்துழைப்புடன் நகரக் காத்திருக்கின்றன என்ற கருத்து மிகச் சமீபகாலமாக இந்திய ஊடகப் பரப்பில் பேசப்படுகின்றது.  

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிலையற்ற பொருளாதாரத் தன்மைக்கு வழிவகுத்தது. அத்துடன் அமெரிக்கா இன்னும் தீவிரமாக டொலரை தனது அமெரிக்க நலன்களை மாத்திரம் முன்னேற்ற ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவே பிறிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதார வியூகங்கள் மேலும் வலுப்பெறக் காரணமாகியது என்ற முடிவுக்கு வரலாம்.   மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பலவீனமான பொருளாதாரச் செயற்பாடுகள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் இருந்து பிறிக்ஸ் கையாண்டு வரும் பொருளாதார உத்தி இம்முறை வலுப்பெற்றுள்ளது என்ற கருத்தும் உண்டு.

ரசிய - உக்ரெயன் போர்ச் சூழல் சமகால உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணம். இந்த நிலையில் இந்த மாதம் இருபத்தியிரண்டாம் திகதியில் இருந்து இருபத்தி நான்காம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாடு சீன - இந்திய, ரசிய - சீன உறவுகளுக்கு வலுச் சேர்ப்பதுடன், சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிரான புதிய வர்த்தக நடைமுறைகளை உருவாக்கும் என்ற அச்சம் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதையே அமெரிக்கச் சார்பு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக நிதி முறையின் முக்கிய நன்மை பண முறையின் அதிக பல் வகைப்படுத்தலாக இருக்கும் என்ற அச்சம் கலந்த தொனி மேற்கு மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில்  வெளிப்படுகின்றன.

அதேநேரம் உலக நடைமுறை விவகாரங்கள் சிலவற்றில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் குறிப்பாக ஜீ -7 அங்கத்துவ நாடுகளிடையே உருவாகி வரும் முரண்பாடுகளும் பிறிக்ஸ் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும் கூறலாம்.

இந்த இடத்திலேதான் அமெரிக்காவுடனும் மற்றும் ரசியா சீனா ஆகிய நாடுகளுடனும் உறவைப் பேணி வரும் இந்தியாவின் இரட்டைக் கொள்கை அல்லது சர்வதேச தேவைக்கு ஏற்ப இசைந்து செயற்படும் அரசியல் - பொருளாதார அணுகுமுறை பிறிக்ஸ் மாநாட்டில் முக்கியம் பெறுமா அல்லது சீனாவின் பொருளாதார ஆதிக்கத்துக்குள் இந்திய நிலைப்பாடு முடங்குமா என்பதை அவதானிக்க வேண்டும்.

இந்தோ - பசுபிக் விவகாரத்தில் இந்தியா தமக்குப் போட்டியல்ல என்றும் அமெரிக்கா வலிந்து உள் நுழைவதுதான் தமக்குப் பிரச்சினை எனவும் சீனாவின் அதிகாரபூர்வ ஆங்கில செய்தித் தளமான குளோபல் ரைம்ஸ் (globaltimes) சுட்டிக்காட்டி வரும் நிலையில், சீனாதான் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தமக்குப் பிரச்சினை என்றும் போட்டி எனவும் இந்தியா மார்தட்டுகிறது. 

ஆனால் சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு நிலையில்தான் இந்தியாவும் சர்வதேச அரங்கில் இரட்டைக் கொள்கையைப் பின்பற்றுகிற என்பது பகிரங்கமான உண்மை. அதாவது மேற்கு மற்றும் ஐரோப்பிய முகமும் இந்தியாவிடம் இருப்பதை மறுக்க முடியாது.  

பிறிக்ஸ் கூட்டமைப்பைக் கடந்து இந்தியா தொடர்பான நம்பிக்கை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இன்னமும் உண்டு. குறிப்பாக இந்தோ - பசுபிக் விவகாரம் உள்ளிட்ட உலக அரசியல் ஒழுங்கு முறைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ தம்முடன் நிற்கும் என முழுமையாக அமெரிக்கா நம்புகிறது. அதாவது மேற்கு மற்றும் ஐரோப்பிய முகமும் இந்தியாவிடம் உண்டு

ஆகவே ரசிய - உக்ரெயன் போரினால் ரசியப்  பொருளாதாரத்துக்கு  ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய, இந்திய ரூபாவைச் சர்வதேச வர்த்தகத்தில் ரசியாவின் ஒத்துழைப்புடன் ஈடுபடுத்த முற்படும் இந்தியாவின் பொருளாதார அணுகுமுறை முழு அளவில் வெற்றியளிக்க வேண்டுமானால் சீனா ஒத்துழைக்க வேண்டும். ரசியாவும் அதனை மனதார விரும்ப வேண்டும்.

ஆனால் இந்திய ரூபாவுக்குச் சர்வதேச அங்கீகாரத்தை முழு அளவில் வழங்க சீனா இணங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை. இந்த நிலையில்தான் சர்வதே அணுகுமுறை பற்றிய இந்திய இரட்டைக் கொள்கை அம்பலப்படலாம்.

பிறிக்ஸில் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு பிரதானமாக இருந்தாலும் மூலோபாய ஒழுங்குமுறையில் ரசியாவும் சீனாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாகவே இருக்கும்.

ஆனாலும் பிறிக்ஸ் கூட்டமைப்பைக் கடந்து இந்தியா தொடர்பான நம்பிக்கை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு இன்னமும் உண்டு. குறிப்பாக இந்தோ – பசுபிக் விவகாரம் உள்ளிட்ட உலக அரசியல் ஒழுங்கு முறைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ தம்முடன் நிற்கும் என்ற முழு நம்பிக்கை அமெரிக்காவுக்கு உண்டு. 

இந்தியாவின் இந்த இரட்டைப் போக்கு அரசியல் நன்கு தெரிந்த நிலையிலேதான் சீனா இந்தியாவைக் கிண்டலாகப் பார்க்கிறது. ரசியாவும் இராணுவ ரீதியாக இந்தியாவைப் பலப்படுத்த  விரும்பவில்லை. இந்தியாவுக்கும் சீனாவைிட ரசியா பற்றிய முன் எச்சரிக்கை இல்லாமலில்லை.   இந்த இடத்தில்தான் பிறிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்படும் பொருளாதாரம் தொடர்பான முழுமையான உடன்பாட்டுக்கு இந்தியா செல்லுமா என்ற கேள்விகள் விஞ்சியுள்ளன. ஆனால் இந்தியாவின் இத் தளம்பல் நிலை இலங்கைக்கு அரசியல் பொருளாதார ரீதியில் மேலும் சாதகமான சூழலை உருவாக்கும்.

குறிப்பாக சீன - இந்திய அரசுகளின் செல்லப் பிள்ளையாக இலங்கை தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவைக் கடந்து அமெரிக்காவும் இலங்கைக்கு அவ்வப்போது செல்லம் கொடுக்கும். இது ஈழத்தமிழர்களுக்கு மாறாத வலியாகவும் இருக்கும்.

மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கலின் பின்னணியில், தமது லாப நட்டங்கள் கருதி வல்லாதிக்க நாடுகள் அமைதியாக இருக்கின்றமையும் பட்டவர்த்தனம். 

இப் போட்டிகளுக்கு மத்தியில் ஈழத்தமிழ்த் தரப்பு எவ்வாறான நகர்வுகளையும் அரசியல் பொறிமுறைகளையும் வகுக்க வேண்டும் என்பது குறித்து இப் பத்தியில் ஏலவே விபரிக்கப்பட்டிருந்தாலும், பின்னா் மற்றொரு பத்தியிலும் விரிவாகப் பார்ப்போம்.