2024 இல் இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதார நிலைமை

கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம்

ஈழத்தமிழர்களுக்கு அன்று நடந்ததை ஏற்க விரும்பாத சிங்கள மக்களுக்கு இன்று உணர்த்திருக்கும் புதிய சட்டம்
பதிப்பு: 2024 ஜன. 26 14:37
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 29 14:27
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு.
 
போர்க்காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களும் எதிர்நோக்கிய அச்சுறுத்தல்களைத் தற்போது சிங்கள மக்களுக்கு உணர்த்தியிருக்கும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம்

கருத்துச் சுதந்திர மீறல் என்பது கிரிமினல் குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஆகக் குறைந்தது இருபது வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும்.

செய்தி அல்லது ஒரு தகவல் தவறான முறையில் வெளியிடப்பட்டிருந்தால் அதனைத் திருத்துவதற்கு அல்லது தண்டிப்பதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால் இச் சட்ட மூலம் எந்த ஒரு சாதாரண பொதுமகனும் சிந்திப்பதைத் தடுக்கிறது.

நிகழ்நிலை காப்பு நகல் சட்டமூலம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நகல் சட்ட மூலத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து மனுக்கள் இலங்கை ஒற்றையாட்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்த நீதியரசர்கள் சில திருத்தங்களோடு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என்று சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர்.

ஆனால் 23 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குறித்த நகல் சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் சேர்க்கப்படவில்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை.

எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 46 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல வர்த்தகர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அச்சமடைந்துள்ளன.

மூன்று வருடங்கள் பதவிக்காலம் கொண்ட ஐந்து பேர் கொண்ட Online Safety Commission எனப்படும் நிகழ்நிலை காப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்துச் சில தொடர்பாடல்களை தடை செய்வது இதன் பிரதான நோக்கமாகும்.

ஐந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார்.

தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த நகல் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மயிலத்தமடுமாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதிகளில் அத்துமீறிப் பயிர் செய்கையிலீடுபடும் சிங்கள விவசாயிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் போடப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் பசுமாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன. அவ்வாறு வெளியிட்டாலும் சிங்கள விவசாயிகளைத் தடுக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன

போலி நிகழ்நிலை கணக்குகள் குறிப்பாக முகநூல், ரூவிற்றர் போன்ற சமூகவலைத்தளங்களை ஒருவர் போலியாக வைத்திருப்பதாக இந்த ஆணைக்கு கருதினால் அல்லது முறைப்பாடு கிடைத்தால் அந்தக் கணக்குகள் தடை செய்யப்படும்.

ஆனால் உண்மையான முகநூல் கணக்கு ஒன்றையும் அரசியல் நோக்கில் இந்த ஆணைக்குழு போலியானது எனக் கூறித் தடை செய்யலாம் என்று ஊடக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

ஏனெனில் பிரதான ஊடகங்களில் வெளியிட முடியாத பல விடயங்களை குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் மேற்கொள்ளும் ஊழல் மற்றும் அதிகாரத் துஸ் பிரயோகங்களை சமூகவலைத்தளங்கள் வெளிப்படுத்துகின்றன.

இதனால் குறித்த சமூகவலைத்தளக் கணக்குகளை இந்த ஆணைக்குழு அரசியல் நோக்கில் திட்டமிட்டுத் தடுக்கக்கூடிய ஏற்பாடுகள் இச் சட்ட மூலத்தில் உண்டு என்பது பகிரங்கமாகும்.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருப்பர்.

இவ்வாறு நிபுணர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு பிரதான செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றினால் பாதிக்கப்பட்ட அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபருக்கு (ஊடகவியலாளருக்கு) அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு எச்சரிக்கை உத்தரவுகளை இந்த ஆணைக்குழு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு எதிராக குறித்த செய்தியாளர் அல்லது குறித்த சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க இயலாது.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் முடியும்.

சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர்.

அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவிற்கு எதிராக எந்தவிதமான சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாது. இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த நகல் சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல் குற்றங்களாகும்.

அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய் நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் பாரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் இ;ச் சட்டமூலம் தெளிவாகக் கூறுகின்றது.

இதேபோன்றதொரு சட்ட அமைப்பு பிரித்தானியாவில் கடந்த யூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்கள். ஊடகத்துறையினர், சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள் என பலரோடும் கலந்துரையாடியே சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதேநேரம் இணையப் பாதுகாப்புக்கு ஏற்ற முறையிலும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்காத முறையில் சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால் இலங்கைத்தீவில் இச் சட்டமூலம் உருவாக்கப்பட்டபோது எவருடனும் கலந்துரையாடப்படவில்லை. குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் இச் சட்ட மூலத்தை தயாரித்திருக்கின்றன.

அத்தோடு உயர் நீதிமன்றம் கூட இதனை அங்கீகரித்திருக்கிறது. குறிப்பிட்ட சில சரத்துக்களில் மாத்திரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டாலும் ஐந்துபேர் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுமா அல்லது ஜனாதிபதிக்கு தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவருக்குமே தெரியாது.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் திருத்தங்களைச் செய்வதற்குக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கிரிமினல் குற்றமாகவே ஓரக் கண்ணால் பார்க்கிறது

போர் நடைபெற்ற 2009 மே மாதம் வரையும் சமூகவலைத்தளங்கள் இலங்கைத்தீவில் பெரியளவில் இயங்கவில்லை. ஆனால் ஊடகங்களைக் கட்டுப்படுத்த குறிப்பாக தமிழ் ஊடகங்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்த மிகக் கடுமையான முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

தமிழ் ஊடகத்துறை விவகாரத்தைக் கையாள இராணுவமும் புலனாய்வுத் துறையும் தன்னிச்சையாகவும் செயற்பட்டிருந்தது.

இதுவரை தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்த 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் குண்டு வீசித் தாக்கப்பட்டிருக்கின்றன.

1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கிரிமினல் குற்றமாகவே ஓரக் கண்ணால் பார்க்கிறது.

ஆனால் தற்போதுதான் சிங்கள ஊடகத்துறையும், சிங்கள சிவில் சமூக அமைப்புகளும், சிங்கள சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் கருத்துச் சுத்தந்திரத்தைக் கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடிய அளவுக்குச் சட்டங்களை இயற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பி அச்சமடைகின்றனர்.

அதேநேரம் மட்டக்களப்பு மயிலத்தமடுமாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதிகளில் அத்துமீறிப் பயிர் செய்கையிலீடுபடும் சிங்கள விவசாயிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் போடப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் பசுமாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன.

அவ்வாறு வெளியிட்டாலும் சிங்கள விவசாயிகளைத் தடுக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன.

ஆகவே இச் சட்டமூலத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றால், தமிழர்கள் விடயத்தில் சிங்கள ஊடகத்துறையினர் கையாளும் செய்தியிடல் முறையும் கிரிமினல் குற்றமல்லவா?

போர்க் காலத்தில் சில சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய சிங்கள ஊடகவியலாளர்கள் தற்போது மிகவும் அரிதாகவே உள்ளனர்.