2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்

இலங்கை மீதான வல்லரசுகளின் ஆதிக்கம், கொழும்பு அரசியலில் முரண்பாடுகளை உருவாக்கும் பூகோள அரசியல்

மைத்திரி - ரணில் மோதல், றோ மீதும் குற்றச்சாட்டு - ஆனால் மறுக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ன
பதிப்பு: 2018 ஒக். 17 15:03
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 22:06
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது என்றும் இந்த சதித் திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய ஊடகவியலாளர்கள் தொவித்துள்ளனர். ஆனால் மைத்திரிபால சிறிசேன அவ்வாறு கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
 
அதன்போது விளக்கமளித்த அமைச்சர் ராஜித சேனரட்ன, தன்னை கொல்வதற்கான சதிமுயற்சியில் றோவிற்கு தொடர்புள்ளதாக சிலர் கூறியதாக மாத்திரமே மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்

ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தை இந்த நாடுகளின் இராணுவ உதவியோடு இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் அழித்தது. ஆனால் தற்போது இலங்கை தொடர்பாக இந்த நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் போட்டி, இலங்கைத் தீவின் இறைமைக்கே ஆபத்து என்பதை இனியாவது இலங்கை அரசு உணர வேண்டும்-- அவதானிகள்.

எனினும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியச் செய்தியாளர் ஒருவர், அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றிய அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன றோவைக் குற்றம்சாட்டியதாகத் தன்னிடம் தெரிவித்தனர் என்று அமைச்சர் ராஜித சேனரட்னவிடம் சொன்னார்.

ஆனாலும் அந்த இந்தியச் செய்தியாளர் சுட்டிக்காட்டிய விடயத்தை அமைச்சர் ராஜித சேனரட்ன முழுமையாக நிராகரித்தார்.

அதேவேளை, தன்னைக் கொலை செய்வதற்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, திட்டம் தீட்டியதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளமை இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கும் என இந்தியாவில் இருந்து வெளியாகும் தி ஹிந்து என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது.

கொலைச் சதி தொடர்பாக இலங்கையில் கைதான இந்திய நபர் றோவின் முகவராக இருக்க வேண்டும். றோவின் இந்தச் செயற்பாடுகள் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க சிஜஏயின் சில செயற்பாடுகள் அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருப்பது போன்றுதான், றோவின் இந்த சதித் திட்டமும் மோடிக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளதாக இன்று புதன்கிழமை வெளியான தி ஹிந்து என்ற நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் சர்வதேச நகர்வுகளுக்கான அறுவடைதான், தற்போதைய தென்னிலங்கை அரசியல் எதிர்நோக்கியுள்ள ஸ்திரமற்ற நிலை என்பதும் மற்றுமொரு கணிப்பு.

அதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் முரண்பட்டு வாக்குவாதப்பட்டதாக கொழும்பில் இன்று வெளியான செய்திகளை அமைச்சர் ராஜித சேனரட்ன மறுத்துள்ளார்.

கொழும்புத் துறைமுக அபிவிருத்தி தொடர்பான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்தே இருவரும் வாக்குவாதப்பட்டதாக கொழும்பில் இன்று புதன்கிழமை வெளியான ஆங்கில, தமிழ் நாளேடுகளில் செய்தி பிரசுரமாகியிருந்தது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனை மீது இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

ஆனால் அதனை நிராகரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு கொள்கலன் முனையை வழங்க முடியாதென இந்தியாவுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்றும் வேண்டுமனால் மேற்குப் பக்க முனையை பயன்படுத்த முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதனையடுத்தே இருவரும் வாக்குவாதப்பட்டதாக ஆங்கில, தமிழ் நாளேடுகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அமைச்சர் ராஜித சேனரட்ன இந்த செய்திகளையும் மறுத்துள்ளார்.

இதேவேளை, வல்லரசு நாடுகளின் போட்டியினால் இலங்கைக்கு ஆபத்து என மைத்திரிபால சிறிசேன சென்ற ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் புறகர் பகுதியான மகரகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளமை இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகளுக்கு ஆபத்து என சிங்கள இடதுசாாி இயக்கத்தின் சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் முதல் வாரத்தில் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

இதேவேளை தன்னுடை தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ காணரம் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் தன்னைக் கொலை செய்வதற்கு இந்திய றோ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஈழப் போருக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துக்கு உதவியளித்த இந்தியா, அமெரிக்கா. ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகள் தற்போதும் தமககுரிய பூகோள அரசியல் சிந்தனையோடு இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றன.

ஆனால், இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள் எந்தவொரு காலத்திலும் வல்லரசு நாடுகள் மீது குறிப்பாக இந்திய அரசு மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட்டதில்லை என அவதானிகள் கூறுகின்றனர்.

சிங்கள அரசியல் தலைவர்கள் சீனாவை மையப்படுத்திய நாடுகளினுடைய உதவிகளையும் அரசியல் செயற்பாட்டு முறைகளையுமே அதிகளவில் விரும்புவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நரேந்திர மோடி அரசின் உதவியுடன் ஈழத் தமிழர்களின் கடற்பிரதேசம் உள்ளிட்ட திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் எண்ணெய் வள ஆய்வுக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசும் திருகேணமலைத் துறைமுகம் நோக்கி தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நோக்கம் என சிங்கள இடதுசாரி கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன.

ஈழத் தமிழர்களின் 70 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தை இந்த நாடுகளின் இராணுவ உதவியோடு இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் அழித்தது.

ஆனால் தற்போது இலங்கை தொடர்பாக இந்த நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் போட்டி, இலங்கைத் தீவின் இறைமைக்கே ஆபத்து என்பதை இனியாவது இலங்கை அரசு உணர வேண்டும் என்கின்றனர் அவதானிகள்.

இலங்கை இன ரீதியாக பிளவுபட்டிருப்பதும், தென்னிலங்கை சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் தமக்கிடையே மோதுப்படுவதும், இறக்குமதிப் பொருளாதாரத்தில் இலங்கை தங்கியிருப்பதும் அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வசதியானது. சீனாவுக்கு அது இன்னும் இலகுவானது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் முன்னரான சூழலில் இந்த நாடுகளுக்கு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முடியாதவொரு நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அழிப்பதாக நினைத்துக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் சர்வதேச நகர்வுகளுக்கான அறுவடைதான், தற்போதைய தென்னிலங்கை அரசியல் எதிர்நோக்கியுள்ள ஸ்திரமற்ற நிலை என்பதும் மற்றுமொரு கணிப்பு.