சமூகச் செயற்பாட்டாளர்களும் சட்ட வல்லுநர்களும் சொல்வது என்ன?

தமிழக அரசாணை வெளியீடு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்படுமா?

ஐவரின் கருத்து ஒலிப்பதிவுகள்
பதிப்பு: 2018 மே 29 07:37
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஜூலை 11 13:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையினை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை ஒன்றிணை வெளியிட்டுள்ளது. "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு வந்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியிலேயே, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கோண்டு செயல்பட்டு வருவதனால், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட முடிவெடுத்து, அதற்கான அரசாணைகளை இவ்வரசு வெளியிட்டுள்ளது," என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் செயற்பாட்டாளர்களும் துறை சார் நிபுணர்களும் இந்த அறிவித்தலின் சட்டவலு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.
 
"தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றாத காரணத்தால், தூத்துக்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை நிரந்திரமாக மூடக் கோரி வந்தனர்.

"ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் இன்று (28.05.2018), தலைமைச் செயலகத்தில் என்னையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களையும் , மாண்புமிகு மூத்த அமைச்சர்களையும், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, ஆலையை நிரந்திரமாக மூட அரசாணை பிறப்பிக்குமாறு வைத்த கோரிக்கைகளும், தமிழ்நாடு அரசால் கவனாமக பரிசீலனை செய்யப்பட்டது," என்றும் அதன் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்திரமாக மூடப்படுமா? அல்லது நீதிமன்றத்தின் உதவியால் மீண்டும் திறக்கப்படுமா? என்பதனை அறிய சமூக செயற்பாட்டாளர்களும் சட்ட வல்லுநர்களும் கூர்மைக்கு அளித்த விளக்கவுரை கீழே:

தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கென தொடர்ந்து இயங்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொறியியலாளர் சுந்தர் ராஜன் அவர்களிடம் இன்று வெளியான அரசாணை குறித்து கேட்ட பொழுது:

"போராடும் மக்களுக்கும் அவர்கள் பட்ட காயத்திற்கும் சிறு மருந்தாக இன்றைய அரசாணையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இவ்வாணையால் ஸ்டெர்லைட் ஆலையினை மூட உதவாது.

சட்டமன்றத்தின் வழியே அரசு தன் கொள்கை முடிவாக அறிவிக்காமல், ஆலையை மூடும் தமிழ்நாடு அரசின் ஆணை வெற்றுக் காகிதமே!
சட்டமன்றத்தின் வழியே அரசு தன் கொள்கை முடிவாக அறிவிக்காமல், ஆலையை மூடும் தமிழ்நாடு அரசின் ஆணை வெற்றுக் காகிதமே!@@"மிக சாதாரணமான காரணங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அரசாணையை நீதிமன்றம் எளிதாக கேள்விக்கு உட்படுத்தி, அரசாணையின் தீர்ப்பை இல்லாது செய்ய முடியும்.

"தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் இனிமேல் தாமிர உருக்காலைகள் (Copper smelter industries) செயல்பட அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிடாது. அத்தகைய சட்ட இயற்றினால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை நிரந்திரமாக மூடப்படும்," எனக் கருத்து தெரிவித்தார்.

பல்வேறு சுற்றுச்சூழல் வழக்குகளில் ஈடுபட்டு வரும் வழக்குரைஞர் வெற்றிச்செல்வனிடம், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உரிய தீர்வு கிட்டும் என்பதன் தொடக்கமாக, தமிழக அரசின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடும் அரசாணையை எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டபொழுது:

"இன்று மே 28.05.2018, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டங்கள் தொடர்புடைய இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று, முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட பொது மக்கள் பலர் மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

"அடுத்து, துப்பாக்கிச் சூட்டிற்கு துணை வட்டாட்சியர்தான் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாச்சியர் உத்தரவு பிறப்பிப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதுதான். ஆனால், இதில் முக்கியமான கோணம் என்னவென்றால், பொதுச்சொத்துக்கு கேடு விளைவிப்பவர்களை, பொது அமைதிக்கு கெடுதல் செய்பவர்களை, பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்களை, செயலிழக்கச் செய்ய மட்டுமே காவல்துறைக்கான அதிகாரம் உள்ளதே தவிர, பிறரை சுட்டு வீழ்த்தி கொல்வதற்கான சட்ட அனுமதி இல்லை.

20 ஆண்டுகாலமாக நடந்த சட்ட விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டாமல், மிக பலவீனமாக அரசாணை தயாரிக்கப்பட்டுள்ளது
"தூத்துக்குடி நிகழ்வைப் பொருத்தவரை, இறந்தவர்கள் நெஞ்சு, நெத்தி, என குறி வைத்து சுடப்பட்டுள்ளதால், உயிரைப் பறிக்கும் நோக்கோடே சுடப்பட்டுள்ளனர் என்பதனை புரிந்துகொள்ளலாம். 2016 இந்திய ஒன்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இராணுவமோ, காவல்துறையோ ஈடுபடும் இத்தகைய மோதல் சாவுகளை மெற்கொண்டு விசாரிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 176ஆம் பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அப்படி நடக்கவில்லை.

“அதேபோன்று, தற்பொழுது வெளியிடப்பட்ட அரசாணை, 1974 நீரியல் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே வெளியிட்ட ஆணையின் கீழ், பொதுமக்களின் நலன் கருதியும் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலையின் செயல்பாட்டை தடுக்க, நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு தன் அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால், இவை சட்டத்தின் முன் வலுவான காரணியாக நிற்காது.

"கடந்த 20 ஆண்டுகளாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலையின் தொடர் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டு நிகழ்வினை சுட்டிக்காட்டியுள்ளது, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட, ஆலையின் செயல்பாட்டிற்கான கால நீட்டிப்பு மறுக்கப்பட்டது. இவை எதனையுமே பொருட்படுத்தாதுதான், இந்த ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது.

"இந்த சட்ட விதிமுறை மீறல்களை பட்டியலிட்டு, தொடர் சுற்றுச்சூழல் கேட்டின் முழுமையான தன்மையைக் பட்டியலிட்டு, நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மேற்கோள் கட்டியும், இதுவரை பொதுமக்களுக்கு உண்டான சுகாதார சீர்க்கேட்டையும் முழுமையாக தொகுத்து, அரசாணை வெளியிட்டால் மட்டுமே, நீதிமன்றங்களின் முன் செல்லுபடியாகும். இல்லையேல், இது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான் கொண்டு செல்லும்," எனத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் நித்தியானந்த் ஜெயராமன் அவர்களை கூர்மை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது:

"தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 09.04.2018 மற்றும் 23.05.2018 தீர்ப்புகளின் அடிப்படையில் மட்டுமே தமிழ் நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையினை மூடும் அரசாணையை வெளியிட்டு உள்ளது. இதற்கு மதிப்பே இல்லை. தமிழ்நாடு மாடுக்கட்டுப்பாட்டு வரியம் தனது தீர்ப்பின் முகாந்திரமாக மிக பலவீனமான சட்ட விதிமுறை மீறல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளது. தொழிற்சாலைக்கு சட்டவிதிமுறை மீறலுக்கு ஆதரவாக எண்ணற்ற வலுவான நிகழ்வுகள் இருந்தும் அவைகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ எதிர்ப்பு திட்டங்களுக்கு எதிரான அரசாணை எப்பொழுது?
"கடந்த காலங்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட்டின் அனைத்து விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாவே இருந்துள்ளது. அதன் காரணமாகவே தொழிற்சாலையினை காக்கும் விதத்தில் இவை மிக பலவீனமான தீர்ப்பை வரையறுத்துள்ளது.

"மிக முக்கியமாக, 2007 ஆம் ஆண்டு, தன்னிடம் 172 ஹெக்டேர் நிலம் இருப்பதாக கணக்கு காட்டி, நாள் ஒன்றிற்கு 900 டன்னில் இருந்து 1920 டன் உற்பத்திக்கு அனுமதி பெற்றது. இன்று வரை தனது 102 ஹெக்டேர் நிலத்திலேயே இத்தகைய உற்பத்தியை செய்து வருகிறது.

"அதேபோன்று, தொழிற்சாலையை சுற்றிலும் 25 மீட்டருக்கு அடர்த்தியான மரங்களை உள்ளடக்கிய பசுமை பட்டி (green belt) உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். 22 வருடங்களாக பூர்த்தி செய்யவில்லை. காற்று மாசு ஏற்படுத்தும் பிரிவைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு 123 மீட்டர் உயரமுள்ள திறன் உள்ள புகைப் போக்கி குழாய் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 60 மீட்டர் புகைப் போக்கி குழாய் மட்டுமே உள்ளது.

"28.03.2018 அன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட ஆட்சியகமும் சேர்ந்து, 15 இடங்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில், தொழிற்சாலையினால் பெருமளவிலான நீர் மாசடனைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இவையாவுமே தமிழ்நாடு அரசின் ஆணையில் சுட்டிக்காட்டப்படவில்லை என்பது மிக பலவீனமானது," என்றார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பெரும் மக்கள் இயக்க போராட்டங்களை ஒருங்கிணைத்த சு.ப. உதயக்குமார் அவர்களிடம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வன்முறை, தமிழகத்தில் இதேபோன்ற மக்கள் போராட்டங்களில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த அரசாணை ஏனைய போராட்டங்களுக்கும் தீர்வாக வழங்கப்படுமா? என்று கேட்டபொழுது:

"உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம், பசுமைத் தீர்ப்பாயம் உள்ளிட்டவைகளில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையால் ஆலையினை மூடிவிட முடியாது. 29.03.2018 அன்று, தூத்துக்குடியில் மீண்டும் மாபெரும் பேரணியை மக்கள் ஒருங்கிணைக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பிணங்களை உரிய உறவினர்களிடம் கையளிக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் காலச்சூழுலில், அரசு தன் ஆணை மூலம் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதான தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த நாடகம்.

அறவழிப் போராட்டங்களுக்கு எதிரான அரசின் வன்முறை தவறான முன்னுதாரணமாக அமையும்
"ஆளும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தினை தலைமை தாங்கியிருக்கும் மோடியின் உற்ற நண்பனே வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் என்பதால், இது ஒன்றிய, மாநில அரசாங்கங்களின் கூட்டு சதியே! இந்த அரசாணை சதி மூலம் போராட்டத்தை சிதைப்பதே நோக்கம். வேதாந்தா நீதிமன்றங்களின் மூலம் தடை ஆணையை உடைத்து மீண்டும் ஆலையினை செயல்படுத்த தொடங்கும் வேளையில், போராடும் மக்களை ஒருங்கிணைக்கும் வழிவகைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

"கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வந்த மக்களை அரசாங்கத்தின் சார்பில் முதல் அமைச்சர் உட்பட எந்த அமைச்சர்களும் சந்திக்காத பொழுது, திடீரென்று இன்று அரசாணை வெளியிடுவது ஏன்? கூடங்குளம், நியூட்ரினோ, காவிரி ஆற்றுப்படுகையை பாதுகாக்க ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இவை அனைத்திற்கும் தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது? அவைகளை தடுக்க எப்பொழுது அரசாணை வெளியிடும்?

"13ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிறகு அரசாணை வெளியிடும் நாடகம் மூலம், கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடும் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் அனைவருக்கும் தவறான செய்தியினை அரசாங்கம் தெரிவிக்க முனைகிறது. அறவழிப்போராட்டங்கள் இனி சரிவராது, வன்முறை மூலமே தீர்வு கிட்டும் என்ற தவறான வன்முறை கலாச்சாரத்தை விதைக்க முற்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது. இது தமிழகத்தில் தொடர்ந்து அறவழியில் தீர்வினை நோக்கி நகரும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது," என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்தும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை குறித்தும் கருத்து கேட்டபொழுது:

"100வது நாளில் அறவழியில் போராடிய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற வேளையில், மக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வரவிடாமல் வெகுதொலைவிலேயே தடுத்து நிறுத்தியது காவல்துறை, ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களில் நெருப்பு பற்றி எரிந்தது, வன்முறையை இவர்கள்தான் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சித்து விளையாட்டில் ஈடுபட்டதற்கு இணையாக தூத்துக்குடியிலும் நிகழ்த்தினார்கள். இறந்த மக்களின் எண்ணிக்கையும் படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கையும், இவர்கள் குறிப்பிடும் தொகையை விட அதிகம்தான்.

"எண்ணை வளங்கள் சூறையாடப்படுவது தடுக்கப்பட்டால், கனிம வளக் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டால், பன்னாடு நிறுவனங்களுக்கு எதிராக போராடினால், தூத்துக்குடியில் என்ன நடந்ததோ அதுவே நடக்கும் என்ற எச்சரிக்கையையே, இந்த படுகொலைகள் மூலம் அறவழியில் போராடும் மக்களுக்கு, இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகள் செய்தியினை சொல்ல முற்படுகிறார்கள்.

"110 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய அனல் மின் நிலையத்தை ஸ்டெர்லைட் சொந்தமாக வைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அவர்கள் வழங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாடு அரசு, ஏதோ, ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரத்தைத் துண்டித்துவிட்டோம் என்பது போன்ற பொய் செய்திகளை முதலில் பரப்பவிட்டு, படுகொலையை பொய்களின் மூலம் மறைக்கப்பார்த்தார்கள். இப்படி தொடங்கிய பொய்கள், ஆலையினை மூட தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது வரை தொடர்கிறது.

99 நாட்களாக அறவழியில் ஒன்று திரண்ட மக்களுடன் தமிழ்நாடு அரசு எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இணங்கி வரவில்லை, துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரம் காலம் ஆகியும் யார் அதற்கு உத்தவிட்டார்கள் என்பது கேள்வியாகவே இருந்தது. இப்பொழுது துணை வட்டாட்சியர் உத்தரவிட்டதாக சொல்கிறார்கள். வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், துணை வட்டாட்சியர் உத்தரவிட்டதாக இதுவரை ஒரு மரபும் இருந்தது இல்லை.

"நீர் பாதுகாப்பு சட்டம் 1974 அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து இருப்பதால், அந்த சட்டத்தை முறையாக பின்பற்றுகிறோம் என்று ஆலையின் நிர்வாகம் நீதிமன்றம் நாடி, மீண்டும் செயல்பாடுகளை தொடங்க முடியும்.

காவிரிப் படுகையில் களம் இறக்கப்பட்டிருக்கும் 2000ற்கும் மேற்பட்ட துணை இராணுவப்படை இன்னும் காவிரி மாவட்டங்களிலேயே நிற்கிறது
"இதே ஸ்டெர்லைட் ஆலையினை பல்வேறு காலங்களில், குறிப்பாக, 1998, 2010, 2013 இல் ஆலை மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது. 1998 முதல் 2013 வரை பல்வேறு விதிமுறை மீறல்களை புரிந்துள்ளதால், 100 கோடி ரூபாய் தொழிற்சாலை நிர்வாகம் வைப்புத் தொகையாக கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மீண்டும் இயக்க, உச்சநீதி மன்றம் அனுமதி அளித்ததை மறந்துவிட முடியாது. மீண்டும் அதே விதிமுறை மீறல்களின் அடிப்படையிலேயே தொடர்ந்து இயங்கி வந்தது. இத்தகைய சூழல்களை கருத்தில் கொண்டு, அமைச்சரவைக் கூட்டி கொள்கை முடிவாக தமிழ்நாடு அரசு அறிவித்தால் மட்டுமே வெற்றியாக கருத முடியும்" என்றார்.

அதேபோன்று மீத்தேன் திட்டம் குறித்த தனது பார்வையாக, பேராசியர் ஜெயராமன் அவர்கள், "காவிரிப் படுகையில் களம் இறக்கப்பட்டிருக்கும் 2000ற்கும் மேற்பட்ட துணை இராணுவப்படை இன்னும் காவிரி மாவட்டங்களிலேயே நிற்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை ஒரு மாவட்டத்தினை அழித்து வந்தது, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் சார்ந்த பிரச்சனை குறைந்தது 7 மாவட்டங்களை அழிக்கக்கூடியது, பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடியது. ஆக, தூத்துக்குடி போல, இங்கே துணை இராணுவம் கொண்டு, மக்களை நசுக்க முனையலாம். ஆனாலும், நாங்கள் ஓய்ந்துவிடப்போவதில்லை. அரசின் அடக்குமுறைக்கு நாங்கள் அடிப்பணியப்போவதில்லை, அதேவேளை மிகுந்த எச்சரிக்கையோடே களத்தில் நிற்கிறோம்" என்றார் தீர்க்கமாக.