தமது நலன் சார்ந்து செயற்படும் வல்லரசுகள்

அமெரிக்க, சீன படை அதிகாரிகள் கொழும்பில்; இலங்கைத்தீவு தொடர்பான கேந்திரப் போட்டிகள் தீவிரம்

இலங்கையின் முப்படைகளுடன் உறவை பேணவுள்ளதாக கூறுகின்றார் அமெரிக்கத் தூதுவர்
பதிப்பு: 2018 ஜூன் 02 11:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 22:20
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அரசியல் மற்றும் இராணுவ செயற்பாடுகளில் எதிரும் புதிருமாக இருக்கின்ற அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புகளை, இலங்கையின் ஒற்றையாட்சி அரசு எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையின் முப்படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்த அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
 
அமெரிக்க, ஆயுதப்படை சேவைகள் குழுவின் தலைவர் மக் தோன்பெரி தலைமையில், கடந்த 29ஆம் 30ஆம் திகதிகளில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின், உறுப்பினர்கள், கொழும்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் மக்களின் இறைமை தன்னாட்சி அதிகாரங்களுக்கு முரணான நகர்வு எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்
இதனையடுத்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கொழும்பில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த அமெரிக்க படை அதிகாரிகள் குழு, நேற்று வெள்ளிக்கிழமை, இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து உரையாடியுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில், தமிழர் தாயக பிரதேசங்களில், மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ செயற்பாடுகள் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்து பெறப்பட வேண்டிய உதவிகள் குறித்து உரையாடல் இடம்பெற்றதாக உயர்மட்டத் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

இராணுவ செயற்பாடுகளுடன் கூடிய, தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கு நடைபெறவுள்ள நிலையில், கொழும்புக்கு வந்துள்ள அமெரிக்க படை அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் முக்கிய இராணுவ கேந்திர நிலையங்களை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கும் என்றும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, சீன அரசின் படை அதிகாரிகள் குழு ஒன்றும் கொழும்புக்கு வருகை தந்துள்ளது.

இலங்கையின் தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ பயிற்சி அக்கடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக சீன படை அதிகாரிகள் குழு கொழும்புக்கு வருகை தந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

சீன இராணுவத்தின் கேணல் சாங் லூஹூவா தலைமையிலான இந்தக் குழு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை புதன்கிழமை சந்தித்து உரையாடியுள்ளது.

இலங்கைப் படையினருக்கு மேலும் தேவைப்படுகின்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து, இலங்கை, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா விளக்கமளித்தாக கொழும்பில் உள்ள இலங்கை இராணுவத் தலைமையகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகத்தின், வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் தழுவிய கிழக்குக் கடலை மையப்படுத்திய, எண்ணை மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்சுனா ரணதுங்க புதன்கிழமை உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டிருந்தார்.

Schlumberger என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கை ஒன்றை சுலும்பேர்கர் நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவ ஒத்துழைப்புகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் குறித்து அமெரிக்க மற்றும் சீன படை உயர் அதிகாரிகளுடனும் இலங்கை அரசு பேச்சு நடத்துகின்றது.

ஆகவே, 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில். தமிழர் தாயக பிரதேசங்களை மையப்படுத்தியே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், இது தமிழ் மக்கள் கோருகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களின் இறைமை தன்னாட்சி அதிகாரங்களை அழிக்கும் திட்டம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக எதிரும் புதிருமாக இருக்கின்ற, அமெரிக்கா, சினா, இந்தியா ஆகிய நாடுகளுடன் இலங்கை அரசு, இவ்வாறான உதவிகளை எந்த அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு, அமெரிக்க, சீன இராணுவ உதவிகளை பெறுவது குறித்து தமிழ் அரசியல் தலைமைகள் மௌனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இலங்கையில் யார் ஆட்சியமைத்தாலும், அந்த அணியுடன் இணைந்து பயணிப்பதை அமெரிக்கா. சீனா, இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்கள் கடந்தவாரம் கொழும்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து, மஹிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் குறித்து பேசியுள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெறும் அணியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து பயணிக்க வேண்டும் என லியுறுத்தியதாகவும், தமது நலன்சார்ந்து, அமெரிக்கா சிந்திப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெறலாம் என எதிர்ப்பர்க்கப்படும் நிலையில், வல்லரசு நாடுகளின் படை உயர் அதிகாரிகள் கொழும்புக்கு வருவதன் நோக்கம் குறித்து அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.