சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க புதிய செயலணிகள்

ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தால் அரசியல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து விமர்சனம்
பதிப்பு: 2018 ஜூன் 05 14:44
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 05 22:52
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஒற்றையாட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறு வலியுறுத்தி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் அனுப்புவதென, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
 
வலிந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை மீட்பதற்குமான விசேட செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணியில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டமே, ஒற்றையாட்சிக்கு உட்பட்டது. இதனால் அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை செய்வதன் மூலம். சிங்கள குடியேற்றங்களை தடுத்துவிட முடிதென சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நடவடிக்கையை கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து பேசி தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது..

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமகாலத்தில் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்புக்கள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிவகைள் குறித்தும் ஆராய்ந்தனர்.

இதற்கு முன்னதாக முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி எல் வலயம் மற்றும் மகாவலி ஜே வலயம், மகாவலி கே வலயம் ஆகியவற்றினால் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் சுமார் 15 வருடங்களில் வரவுள்ள பாதிப்புக்கள் குறித்து உரிய ஆதாரங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்படி அடுத்த 15 வருடங்களில் வடமாகாணத்தின் சனத்தொகையில் சிங்கள மக்களின் விகிதாசாரம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு பாரிய கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

இந்த நிலையில், அமைக்கப்பட்டவுள்ள செயலணிக் குழுவில் மாகாணசபை உறுப்பினர்கள் எட்டுப் பேரும் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 11பேர் உள்ளடங்கவுள்ளனர்.

சிங்களக் குடியேற்றங்களை தடுப்பது, தமிழ் மக்களிடம் இருந்து படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது, குடியேற்றங்கள் குறித்த சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது ஆகிய விடயங்களும் தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டன.

செயலணியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருக்கவில்லை.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை தடுக்க இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நியாயத்தை பெற முடியாதென சட்ட வலலுநர்கள் கூா்மை செய்தித் தளத்திற்கு கூறினா்.

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய இறைமை அதிகாரத்துடன் கூடிய அரசியல் உரிமைக் கோரிக்கையை முன்வைத்தே ஈழத்தமிழர்கள் 70 ஆண்டுகாலமாக அரசியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவ்வாறானதொரு அரசியல் பிரச்சினையை இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டத்தால் தீர்க்க முடியாதென்றும், இலங்கை அரசின் ஒற்றையாட்சி கட்டமைப்புத்தான், தமிழர்தாயக பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனவும் சட்டவல்லுநர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என கூறி, வடக்கு கிழக்கு மாகணத்தின் தற்காலிக இணைப்பைக் கூட இலங்கை அரசின் உயர் நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு ரத்துச் செய்தது.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கள் தொடர்பான விசாரணைகள், மற்றும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவொரு வழக்கு விசாரணைகளின்போதும், இலங்கை நீதித்துறை சிங்கள பௌத்த பேரினவாத கண்ணோட்டத்துடனேயே தீர்ப்புகளை வழங்கியது என ஈழத் தமிழ்ச் சட்டவல்லூநர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டமே ஒற்றையாட்சிக்கு உட்பட்டது எனவும் இதனால் அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை செய்வதன் மூலம் சிங்களக் குடியேற்றங்களை தடுத்துவிட முடிதெனவும் சட்டவல்லுநர்கள் மேலும் தெரிவித்தனர்.