நிரல்
ஒக். 24 11:54

கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

(இலங்கை) இலங்கையில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையுடன் தெதுரு ஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒக். 24 11:48

பெண் சமத்துவ நிலைநிறுத்தலில் மீரூ இயக்கமா விடுதலைப்புலிகளா தமிழர்களுக்கான முன்னுதாரணம்?

பிரபலங்களிடையே பாலியல் கலாசாரத்தில் சமத்துவம் என்பதையே சமுதாயத்திற்கான பாலியல் சமத்துவமாகச் சித்தரிப்பதோடு தனது தேவையை முடித்துக்கொள்கிறது இன்றைய மீரூ இயக்கம். குடும்ப மட்டத்திலே பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களை இல்லாமற் செய்யவல்ல வேலைத்திட்டங்களை எந்தவித விளம்பரங்களும் இன்றி விடுதலைப் புலிகள் சாதித்திருந்தார்கள். இவற்றை ஈழத்தமிழர்களே இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்மயியும் வரலட்சுமியும் தற்போது பேசியிருப்பவற்றை இந்தக் கோணத்தில் நோக்கவேண்டும் என்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வன்னியில் இடம்பெற்ற இன அழிப்புப் போரில் உயிர்பிழைத்துத் தனது அனுபவங்களைக் கேள்விகளாக உலக மானுடத்திடம் எழுப்பிவருபவருமான 70 வயது நிரம்பிய ஈழத்தமிழ் எழுத்தாளர் பெண்மணி முனைவர் ந. மாலதி.
ஒக். 23 09:52

இலங்கை இராணுவத்தை பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தி பொருளாதாரத்தை அழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினால் அபகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவதாக பொது அமைப்புகளும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், இலங்கை இராணுவத்தின் விவசாய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, பொதுமக்களின் காணிகளில் இலங்கைப் படையினர் விவசாயம் செய்வதால், பல்வேறு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் ஆகவே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்ட போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு கூறினார்.
ஒக். 22 19:44

தென்னிலங்கையிலிருந்து செல்லும் நிதிநிறுவனங்களால் தமிழர்களுக்கு நெருக்கடி

தாயகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலர் பிரிவில் உள்ள காணிகளை தென்னிலங்கையில் இருந்து வரும் நிதி நிறுவனங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதனால் பிரதேச மக்கள் தொழில் செய்வதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக கிராம விவசாய அமைப்பின் தலைவர் த.உதயணன் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தில் உள்ள வளமுள்ள தமிழர்களது புர்வீக நிலங்களை அபகரிக்கும் நோக்கில் தென்னிலங்கையிலிருந்த செயற்படும் சில நிதி நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக உதயணன் சுட்டிக்காட்டினார்.
ஒக். 22 14:49

இணுவில் பிரதேசங்களை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) யாழ்ப்பாணம் - இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை, கோண்டாவில் பிரதேசத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணுவிலில், இன்று காலை மௌன ஊர்வலத்துடன் கூடிய மௌனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலகம் வரை சென்று அங்கு மௌனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் உடுவில் பிரதேச செயலாளரிடம் போராட்டகாரர்களால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
ஒக். 22 12:07

சுயாட்சிக் கோரிக்கையை அங்கரீப்பதற்கான மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளே அவசியமானது - விமர்சகர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், பூகோள அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்த் தரப்பு மேற்குலக நாடுகளுடன் பேரம் பேச வேண்டிய காலமிது. ஆனால் அவ்வாறு பேரம் பேசி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தக் கூடிய ஏற்பாடுகள் தயாரிப்புகள் எதுவும் இல்லாத கையறு நிலையில் தமிழ்த்தரப்பு இருப்பதாக விமர்சகா்கள் கூறுகின்றனர். இவ்வாறான கையறு நிலையில் அனந்தி சசிதரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு உரியதாக இல்லை என்ற காரணத்தினாலேதான் அனந்தி கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார் எனலாம்.
ஒக். 21 20:31

பதினோராயிரத்து 86 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனம் தகவல்

தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் ஸார்ப் (Sharp) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோராயிரத்து 86 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஒக். 21 15:47

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவிக்கு கொலை அச்சுறுத்தல் -துண்டுப் பிரசுரங்களும் விநியோகம்

(அம்பாறை, ஈழம்) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணிக்கு கொலை அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று உறவினர் சங்கத்தை வளர்ப்பதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். திருக்கோவிலில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். பத்து இலட்சம் ரூபா பணம் கொடுக்க வேண்டும் அல்லது உனது தலையை வெட்டுவோம் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொச்சைத் தமிழில் அச்சுறுத்தியதாக அவர் கூறினார். கொலை அச்சுறுத்தல் குறித்து திருக்கோவில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ஒக். 21 14:54

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்தவின் கருத்துக்கு தமிழ் மக்கள் கண்டனம்

இலங்கையில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட சிங்கள மக்களினுடையது என்று தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பத்ம உதயசாந்த குணசேகர வெளியிட்ட கருத்து தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒக். 20 23:10

மோடி- ரணில் சந்திப்பில் வடக்கு - கிழக்கு கடற்பிரதேச ஆதிக்கம் உள்ளிட்ட பூகோள அரசியலின் முக்கியத்துவம்

(மட்டக்களப்பு, ஈழம்) புதுடில்லிக்குப் பயணம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத் ஹவுசில் இன்று சனிக்கிழமை பிற்பகல் சந்தித்து உரையாடியுள்ளார். 2017 ஆம் ஆண்டு நரேந்திரமோடி கொழும்புக்குச் சென்றபோது பேசிய விடயங்கள் அதன் பின்னர் உயர்மட்டச் சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இருவரும் பேசியதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோடி - ரணில் சந்திப்பில் பூகோள அரசியல் விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பேசப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.