செய்தி: நிரல்
டிச. 12 15:46

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 117 வாக்குகளால் வெற்றி -ஜே.பி.வி பங்குகொள்ளவில்லை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசாவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 117 வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது. இலத்திரனியல் முறைப்படியும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு அழைக்கப்பட்டும் வாக்களிப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். எனினும் இன்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் நாடாளுமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
டிச. 12 13:30

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஐ.நா பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரி போராட்டம்

(மன்னார், ஈழம்) வடமாகாணம் - மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்காலத்திற்குரியதாகக் கருதப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை வட கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். தமிழர் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
டிச. 12 11:22

விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளிகள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது நிர்க்கதி

(மன்னார், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, ஒரு நாளேனும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உதவியிருந்தாலோ கைதுசெய்யப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு அமைய கைதுசெய்யப்பட்டு சித்திரவதை முகாம்களான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
டிச. 12 09:31

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது

(கிளிநொச்சி, ஈழம்) தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். இதனடிப்படையிலேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
டிச. 11 23:30

ரணிலை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை- மகிந்த தரப்பு புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு

(அம்பாறை, ஈழம்) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடுகின்றது. அத்துடன் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் சட்டத்திற்கு மாறானது எனக்குறிப்பிட்டு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஏழாம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 122 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தனர்.