கட்டுரை: செய்திக்கட்டுரை: நிரல்
பெப். 15 10:53

போதைப் பொருள் பாவனையின் கூடாரமாக மாறி வரும் கொழும்பு- கொட்டாஞ்சேனையில் பெண் மீது துப்பாக்கிச் சூடு

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப் பொருள் ஒழிப்புத் தொடாபான விழிப்புணர்வு நடவடிக்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கிராமங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், போதைப் பொருள் வியாபரத்துடன் இலங்கைப் படையினருக்குத் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேங்களில் படையினர் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விநியோகிப்பதாக முன்னாள் வடமாகாண சபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் 639 கிராம் ஹெரோயினுடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள விசேட அதிரடிப்படை படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை கலகெதரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப். 08 10:47

அமெரிக்காவின் படைத்தளம்- சிங்கள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டாலும் மறைமுக ஆதரவு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழ்பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளங்களை அமைத்து வருவதாக கொழும்பை மையப்படுத்திய இலங்கை எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவுடன் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பாக ஜே.வி.பி.உறுப்பினர் பிமல் ரட்ணநாயக்கா கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்யப்படுவது வழமை என்று கூறினார்.
பெப். 03 22:59

பாக்கிஸ்தான் கடற்பரப்பில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்பு

(யாழ்ப்பாணம், ஈழம் ) நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரால என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகியுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தை அந்தக் கப்பல் சென்றடையும் என இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் உட்பட 170 இலங்கை கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா். இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.
ஜன. 22 21:34

இலங்கையில் நெருக்கடிக்குள்ளாகி வரும் சிங்கள அரசியல் கட்சிகள் - சந்திரிக்கா புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார்?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். தனது தந்தையான எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான சந்திரிக்கா அந்தக் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிப்பார் என்றும் அது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மூத்த உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவுடன் ஏலவே முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபகாலமாக ஏற்பட்ட முரண்பாடுகள் குழப்பங்களினால் சந்திரிக்கா அதிருப்தியடைந்துள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஜன. 21 09:57

பூகோள அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப விக்னேஸ்வரன் உருவாக்கிய தமிழ் மக்கள் கூட்டணி செயற்படுமா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிய விக்னேஸ்வரன் தற்போது அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கியுள்ளார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையில் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் அவருடைய புதிய கட்சியுடன் கூட்டுச் சேரவில்லை. சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளது. சுயாட்சிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கிய அனந்தி சசிதரன் இதுவரை ஆதரவு வழங்கவில்லை.