தாயகப் பிரதேச மனிதப் புதைகுழிகள் பற்றிய

ஆதாரங்கள் இருந்தும் விசாரனைகளை மூடிமறைக்க இலங்கைப் பொலிஸார் முயற்சி? தமிழக் கட்சிகள் மௌனம்

சிறுவர்களின் பாற்பற்களுடன் எலும்புக்கூடுகள் மன்னாரில் மீட்பு
பதிப்பு: 2018 ஜூலை 21 15:30
புதுப்பிப்பு: ஜூலை 23 15:58
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் போர்க்காலத்திற்குரியது என சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களின் மண்டையோடுகள் பாற்பற்களுடன் மீட்கப்பட்டுள்ளன. இந்த மூன்று சிறுவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். 37 ஆவது நாட்களாக இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியின்போது சுமார் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் இருந்ததாகவும் ஆகவே சடலங்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை எனவும் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, கூறுகின்றார். களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவ்வாறு தெரிவிக்கின்றார்.
 
மன்னர் நகரி்ன் நுழைவாயிலில் உள்ள இலங்கை அரசின் சதொச கட்டடப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள். மனித எச்சங்கள் உள்ளதாக கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

மன்னார் மனிதப் புதைகுழியில் சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை என்பதை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து அறிய முடிவதாகக் கூறுகின்றார் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ.

அன்றில் இருந்து மீட்புப் பணிகள் பல சிரமங்களின் மத்தியில் இடம்பெற்று வருகின்றன. அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க நிதியில்லையென ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் மன்னாரில் உள்ள வேறுசில நிறுவனங்களின் உதவிகள் மூலம் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் புதைகுழியில் 50 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதுவரை மீட்கப்பட்ட 40 எலும்புக்கூடுகளும் ஒன்றின் மீது ஒன்றாகவும் கட்டியணைத்தபடியும் காணப்பட்டது. பெண்கள் அணியும் காப்புகளும் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஆகவே இந்த மனிதப் புதைகுழி போர்க்காலத்திற்குரியது என்ற சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளதாக அங்கு சென்ற சட்டத்தரணி ஒருவர் கூறினார்.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள், புதைகுழியில் முறையற்ற நிலையில் இருந்தாக விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ கூறினாலும், இந்தப் புதைகுழி போர்க்காலத்துக்குரியது என்பதை நேரடியாகக் கூற அவர் விரும்பவில்லை.

அகழ்வுப் பணியை முன்னெடுத்து வரும் களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் இந்த மனிதப் புதைகுழியில் இருந்து மீ்ட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் பேராசிரியர் அதிகாரபூர்வமாக கருத்துக் கூறவிரும்பவில்லை. மேலும் ஆய்வுகள் செய்யப்பட்ட பின்னரே எதையும் கூற முடியும் எனவும் பேராசிரியர் கூறுகின்றார்.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் கல்வியங்காடு- நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால், இலங்கைப் பொலிஸார் அது குறித்த விசாரணைகளை நடத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லையென அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

யாழ் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு ஒன்று தொடர்பான விசாரனையும் இதுவரை ஆரம்பிக்கப்படவேயில்லை.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வின்போது இலங்கைப் படையினரின் போர்க்குற்ற விசாரணைகளை முற்றாக மூடி மறைக்கும் வேலைத் திட்டங்களையே தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

கட்சி வேறுபாடுகள் இன்றி அந்த வேலைத் திட்டங்களில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்பதற்கு, கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழி விவகாரங்கள் மூடி மறைக்கப்படுகின்றமை கோடிட்டுக் காட்டுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

யாழ் செம்மனியில் அறுநுாறு இளைஞர்கள் கொலை புதைக்கப்பட்டுள்ளதாக சேமாரட்ன ராஜபக்ச என்ற இலங்கை இராணுவக் கோப்பரல் ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

1996 ஆம் ஆண்டு யாழ் அரியாலையில், இலங்கை இராணுவத்தின் முன்னரங்கில் கைதாகிப் பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட, யாழ் சுண்டிக்குழி மகளி்ர் கல்லுாரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் கொலை வழக்குத் திர்ப்பின்போது, சேமாரட்ன ராஜபக்ச இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்போது மன்னர் நீதிபதியாக இருந்த எம்.இளம்செழியன் செம்மனி பிரதேசத்திற்குச் சென்று இளைஞர்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தைப் பார்வையிட்டிருந்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு இலங்கைப் படையினரால் 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தெடர்பான வழக்கின், முதலாவது எதிரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சென்ற பத்தாம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிகளவில் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரனைக்கு உதவியளித்த பெண்ணும் அவரது மனும் கடந்த சனிக்கிழமை யாழ் வட்டுக்கோட்டையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

ஆகவே இந்த விடயங்கள் குறித்தும், கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழி விவகாரங்கள் தொடர்பாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன் என்றும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.