மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து

மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட முறிவுகள்- அதிகாரிகள் கூறுகின்றனர்

சிறுவர்கள் ஆறுபேரின் எலும்புகளும் மீட்பு, பௌத்த பிக்குமாரும் பார்வை
பதிப்பு: 2018 ஜூலை 26 15:09
புதுப்பிப்பு: ஜூலை 27 12:19
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் விற்பனை நிலையமான சதொச கட்டட வளாகத்தில் இருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளில், கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருப்பதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவி்க்கின்றனர். இன்று வியாழக்கிழமை 42 ஆவது நாளாக இடம்பெறும் மனிதப் புதைகுழி அகழ்வின்போது, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாகக் குத்தப்படும்போது ஏற்படும் முறிவுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சடலங்கள் புதைகுழியில் உரிய முறையில் புதைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மீட்கப்படும் எலும்புக் கூடுகளில் இருந்து அறியமுடிவதாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறுகின்றார்.
 
மீட்கப்படும் எலும்புக்கூடுகள் போர்க்காலத்துக்குரியவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவிக்கின்றார்.

ஆனாலும் மேலும் ஆய்வுகள் செய்து. உரிய விசாரனை நடத்தப்பட்ட பின்னரே அதிகாரபூர்வமாகக் கூறமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் களனி பல்கலைக்கழகத்தில் கற்கும், பேராசிரியர் ராஜ் சோதேவாவின் மாணவர்களான பௌத்த பிக்குமார் சிலரும் இன்று வியாழக்கிழமை மனிதப் புதைகுழி அகழ்வை பார்வையிட்டுள்ளனர்.

பேராசிரியர் ராஜ் சோமதேவா
மன்னாரில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழி மீட்புப் பணியில் ஈடுபடும் களனிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா. இவருடைய வழிகாட்டலின் கீழ் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. பேராசிரியர் ராஜ் சோமதேவா மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்யும் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித எலும்புக் கூடுகள், மனித எச்சங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை 55 மனித எலும்புக்கூடுகளும் பெண்கள் பயன்படுத்தும் காப்புகள் உள்ளிட்ட மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ஆறுபேரின் எலும்புக் கூடுகளும் உள்ளன.

கொழும்பில் இயங்கும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகப் பிரதிநிதிகள் நேற்றுப் புதன்கிழமை மன்னாருக்கு வருகை தந்து தந்திருந்தனர்.

புதைகுழி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ. ஆர்.ஏ.எஸ். ராஜபக்ஷ, களனி பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோருடனும் அவர்கள் கலந்துரையாடியிருந்தனர்.

அதேவேளை, யாழ் கோட்டை, யாழ் கல்வியங்காடு- நாயன்மார்க்கட்டு செம்மனி பிரதேசங்களில் போர்க்காலத்துக்குரிய மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டிருந்தன.

ஆனால் விசாரனைகளை இலங்கைப் பொலிஸார் உரிய முறையில் நடத்தாமல் மூடி மறைப்பார்கள் என மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன் என்றும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.