இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஏற்பாடுகள் இல்லை- உறவினர்கள் கவலை, போராட்டம் தொடர்கிறது

அனுராதபுரம் சிறையில் 16 ஆவது நாளாகவும் கைதிகள் உண்ணாவிரதம்
பதிப்பு: 2018 செப். 29 19:06
புதுப்பிப்பு: செப். 29 21:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இன்று சனிக்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலருக்கு எதிராக குற்றங்கள் எதனையும் இலங்கைப் பொலிஸார் ஆதாரங்களுடன் முன்வைக்க முடியவில்லை. ஆனால் இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் இழுத்தடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
 
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பொதுமக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தது.

விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோது பெருமளவு இலங்கைப் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக போராட்டத்தி்ல் கலந்துகொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இதேவேளை, அனுராதபுரம் சிறையில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாகவும் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.