அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள்

அனுராதபுரம் சிறையில் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது. கொழும்பு மகசீன் சிறையிலும் 42பேர் போராட்டம்

விடுதலை செய்வதற்கு இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் நிபந்தணை
பதிப்பு: 2018 ஒக். 03 10:00
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 14:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசினால் சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஈழத்தமிழரின் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட கொழும்பிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இன்று புதன்கிழமை முதல் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளருக்கு அவர்கள் எழுத்துமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். கன்டி போகம்பர சிறைச்சாலையில் ஆறு கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
இன அழிப்புப் போர் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சிறைச்சாலைக்குள் வாடும் தம்மை குறுகியகால புனர்வாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டு அரசியல் கைதிகள் கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதன் பின்னர் மகஸின் சிறைச்சாலையிலிருந்து வழக்குக்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நான்கு கைதிகளும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம் சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி பல்வேறு இடங்ளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் 12 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று புதன்கிழமையிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர்.

சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சட்டவாளர் சேனக பெரேரா கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு அறிவித்துள்ளாார்.

அதேவேளை, தடுப்புக் காவலில் விசாரணைகளை எதிர்நோக்கியிருக்கும் 54 தமிழ் அரசியல் கைதிகளில் பலரை மிக விரைவில் விடுதலை செய்ய முடியும் என இலங்கைச் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உறுதியளித்துள்ளாா். ஆனாலும்

சில பிரதான வழக்குகளில் சம்பந்தப்பட்டோரை விடுவிக்கும் முடிவைத் தாம் எடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை நீதி அமைச்சர் தலதா அத்துக் கோரல, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அஸாத் நவ்வி, நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடியிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இவ்வாறு கூறியுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து, ஒவ்வொரு வழக்காக இந்த நால்வர் குழு சுமார் ஒன்றரை மணி நேரம் விரிவாக ஆராய்ந்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்

நேற்று முன்தினம் ( திங்கட்கிழமை) வரை தண்டனை விதிக்கப்பட்ட 51 தமிழ் அரசியல் கைதிகளும் விசாரணைகளை எதிர் நோக்கிய 58 தமிழ் அரசியல் கைதிகளும் தடுப்புக் காவலில் இருந்தனர்.

நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு கைதிகள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு குறைந்த தண்டனைத் தீர்ப்பு மற்றும் புனர்வாழ்வுக் காலம் அனுபவித்தல் ஆகியன விதிக்கப்பட்டன எனக் கூறப்பட்டது.

இதனால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 55 ஆகவும், விசாரணைகளை எதிர்நோக்கும் கைதிகளின் எண்ணிக்கை 54 ஆகவும் மாறியது.

இப்படி விசாரணையை எதிர்நோக்கும் கைதிகளில் 42 பேர் கொழும்பு மகஸின் சிறையிலும், மிகுதி பன்னிருவர் அநுராதபுரம் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் உள்ள பன்னிரு கைதிகளில் எட்டுப்பேரே தற்போது முதலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அந்த எட்டுப்பேரில் இருவர் போர்க்குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அடிப்படையில் அவர்களுக்குக் குறைந்த தண்டனை அல்லது புனர்வாழ்வுடன் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்குகின்றார்.

மற்றொருவரையும் அதே போன்று விடுவிக்கலாம் என அந்த வழக்கைக் கையாளும் அரச சட்டவாதி எழுத்தில் சிபாரிசு செய்துள்ளார். அவரது வழக்கு நவம்பர் மாதம் தவணைக்கு அழைக்கப்படும் போது சட்டமா அதிபர் அத்தகைய பரிந்துரையை நீதிமன்றுக்கு வழங்குவார்.

மேலும் இருவரின் வழக்கு நேற்று (செவ்வாயன்றும்) நாளை (வியாழனன்றும்) அநுராதபுரம் நீதிமன்றத்தில் எடுக்கப்படுகின்றது. அவர்கள் அளித்ததாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்பதா என்பது குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்தது.

வாக்குமூலத்தை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் அந்த இருவரும் விடுவிக்கப்படுவர். வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்று அதனடிப்படையில் அவர்களைக் குற்றவாளிகளாகக் கண்டாலும் குறைந்த தண்டனை அல்லது புனர்வாழ்வுடன் அவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தைக் கோரும்.

எண்மரில் எஞ்சிய மூவரையும் விடுவிக்கும் அல்லது புனர்வாழ்வோடு விடுவிக்கும் எந்த ஏற்பாட்டுக்கும் தாம் இணங்க இயலாது என சட்டமா அதிபர் கையை விரித்துள்ளார். இந்த மூவர் மீதும் புலிகளின் காவலில் இருந்த படையினரை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சுட்டுக் கொலை செய்தனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட போது அதை எதிர்த்து அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றத் தாம் இணங்கினார் என்பதை சட்டமா அதிபர் சுட்டிக் காட்டினார். இவர்கள் எப்படியும் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டேயாக வேண்டும் எனத் தெரிவித்த சட்டமா அதிபர், அவர்களின் வழக்குகளை அடுத்தடுத்துத் திகதியிட்டு விரைந்து முடிப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தார்.

இந்த எட்டுப்பேர் தவிர அநுராதபுரத்தில் எஞ்சியுள்ள மற்றைய நான்கு கைதிகள் மற்றும் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள 42 கைதிகள் என மொத்தம் 46 கைதிகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் சட்டமா அதிபரால் எடுக்கப்பட்டுள்ளன.

ஜெயராம் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை,

கதிர்காமர் படுகொலை,

ஜானக பெரேரா படுகொலை,

27 பொதுமக்கள் படுகொலை,

மஹிந்த விஜேசேகராவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் விடயத்தில் சட்டமா அதிபர் தலையிடமாட்டார். வழக்கு விசாரணைகளைத் துரிதமாக நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் அல்லாதோர் விடயத்தில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரங்களை மாற்றியமைத்தால்தான் குறைந்த தண்டனை மற்றும் புனர்வாழ்வோடு நீதிமன்றம் அவர்களை விடுவிடுக்க முடியும். அத்தகையோரின் வழக்குகள் அடுத்த தவணைகளுக்கு எடுக்கப்படும் போது அவ்வாறு குற்றப் பத்திரங்களை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை அரச தரப்பு எடுக்கும்.

இந்தப் பிரதான வழக்குகள் அல்லாதவற்றுடன் தொடர்புபட்டோர் விடயத்தில் அடுத்து வரும் மாதங்களில் அவர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் எடுக்கப்படும்போது, குறைந்த தண்டனை அல்லது புனழ்வாழ்வுடன் அவர்கள் ஒவ்வொரையும் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.

இத்தகைய இணக்கப்பாடு நேற்றைய கலந்துரையாடலில் எட்டப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பாராயின் அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க ஒழுங்குகளை சட்டமா அதிபர் திணைக்களமும், நீதி அமைச்சும் விரைந்து மேற்கொள்ளும் என்றும் நேற்றைய கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள 55 தமிழ்க் கைதிகள் விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இன்று புதன்கிழமை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. இந்தக் கூட்டம் முடிவுற்றதும் கைதிகள் தொடர்பான விடயம் குறித்து இரு தலைவர்களும் ஜனாதிபதியுடன் பேசுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.