(முல்லைத்தீவு, ஈழம்)
ஜே.வி.பயின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா, கனடவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அவரைத் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் வரவேற்கவுள்ளதாக செய்திகளும் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. ஜே.வி.பி பற்றிய விம்பம் மிகச் சமீபகாலமாக அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இந்தியாவுக்குச் சென்று வந்த பின்னர் ஜே.வி.பியின் பாவங்கள் கழுவப்படுகின்றன. போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலர் ஜே.வி.பி மீது நம்பிக்கை வைக்கிறார்கள் புதிய மாற்றம் என்று வேறு சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள். அனுரகுமார திஸாநாயக்க நல்லவர் வல்லவர் என்றும் சிலர் மார் தட்டுகிறார்கள். சிங்களவர்கள் ஜே.வி.பியை நம்புவதும் விசுவசிப்பதும் வேறு.