ஐநுாறாவது நாளைத் தாண்டிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? உண்மையை வெளிப்படுத்துமாறு கொழும்பில் கோஷம்

இன்று ஆரம்பித்த போராட்டம் நாளை நள்ளிரவு வரை தொடரும்
பதிப்பு: 2018 ஜூலை 12 22:32
புதுப்பிப்பு: ஜூலை 12 23:46
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகத்திலும் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பிரதேசங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்றும், இல்லையேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்புகள், பொது நிறுவனங்கள். இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கனக்கான மக்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
 
தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்புக்கு வருவார்கள் என்று ஏற்பாட்டளர்களில் ஒருவரான சட்டத்தரணி சிறீநாத் பெரேரா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்பாக இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, வீதிகளில் செல்லும் வானங்களை வழிமறிந்து துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன.

கொழும்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில், ஐநூறு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்துகின்றமை குறித்து, தென்னிலங்கை சிங்கள மக்களுக்குத் தெளிவூட்டும் நோக்கில் கொழும்பு வீதிகளில் செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்போது எடுக்கப்பட்ட படம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரையும் ஒழுங்கான முறையில் பொறுப்புக் கூறவில்லை என்றும் அது தொடர்பாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்குத் தெளிவூட்டும் வகையிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் ஐநூறு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துகின்றமை குறித்தும் தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்கு தெரியப்படும் நோக்கிலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பில் நடத்தப்படுவதாகவும் எற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் ஐநூறு நாட்களைக் கடந்தும், மைத்திரி- ரணில் அரசாங்கம் பதில் வழங்கவில்லை என்றும், மகஜர் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாளை வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, நடவடிக்கை எடுக்கப்படும் என 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இன்று வரை எந்தவிதமான பேச்சுக்களும் இல்லை என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன், மற்றும் கத்தோலிக்க, கிறீஸ்த்தவ அருட்தந்தையர்கள், சட்டத்தரணிகள் உட்பட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கைப் பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டபோதும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பலர், சிவில் உடையில் நின்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அவதானித்துக் கொண்டிருப்பதாக போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரான சூழலிலும் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் கடத்தப்பட்டுக் காணமல் ஆக்கப்பட்டிருந்தனர். இலங்கைப் படையினரிடம் போராளிகள் பலர் சரணடைந்தும், உறவினர்களினால் கையளிக்கப்பட்டும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் அழுத்தங்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை அறிய அலுவலகம் ஒன்றை மைத்திரி- ரணில் அரசாங்கம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் செயற்படுத்தி வருகின்றது.

ஆனால், இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டு, நீதி கடைக்க வேண்டும் என உறவினர்கள் கூறி வருகின்றனர். மைத்திரி- ரணில் அரசாங்கத்திலும் நம்பிக்கையில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பிரித்தானியாவை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சித்திரவதைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் அமைப்பு. இலங்கையில் சித்திரவதை, ஆட்கடத்தல் தொடருவதாக 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.