இலங்கைச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுவிக்கும் விடயத்தில்

மைத்திரி ரணில் அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை- கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்தல்
பதிப்பு: 2018 ஒக். 01 14:44
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 15:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வழக்கு விசாரணைகளின்றி பல வருடங்களாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்தால் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.
 
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டப் பூட்டினை உடை அரசியல் தீர்மானம் எடு, அரசியல் கைதிகளை விடுதலை செய், என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்படக்காரணமாக இருந்தது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு.

விடுதலை இயக்கங்களுக்கும் இல்ங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுகளின்போதும், இலங்கை, இந்திய உடன்படிக்கையின்போதும் அரசியல் கைதிகளின் விடுதலை முதன்மைக் கரிசனையில் எடுக்கப்பட்டு அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் சாத்தியப்படுத்தப்பட்டது.

அவ்வாறிருக்கும்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை மட்டும் சட்டரீதியாக அணுக முற்படுவது நீதியற்றதாகும்.

இதற்குக் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றாமல் இலங்கை அரசாங்கம் அதை நீடிப்பது அரசியல் உள்நோக்கமுடையதேயன்றி வேறெதுவாக இருக்க முடியும்? என இதன்போது கருத்துத் தெரிவித்த சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

தமிழ் மக்களின் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் இறுக்கமாகச் செயற்படுவது மிகவும் அநீதியான செயற்பாடாகும் என வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் குற்றம் சுமத்தினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளின் பெற்றோர், தமது பிள்ளைகளை இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அவர்கள் சிறைகளில் நாளாந்தம் மிக மோசமான மன ரீதியான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர் எனவே அவர்களின் நலனைக் கருதி விடுவிக்குமாறு உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு உட்பட கொழும்பிலும் போராட்டங்கள் இடம்பெற்ற வருகின்றன.

அதேவேளை, இன்று 17 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் 18 ஆவது நாளாகவும் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.