செய்தி: நிரல்
ஓகஸ்ட் 11 15:19

மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அக்கரப்பத்தனையில் தொழிலாளர்கள் சத்தியாக்கிரகம்- ஒருவர் உண்ணாவிரதம்

(வவுனியா, ஈழம் ) மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி 30ற்கும் அதிகமானோர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சனிக்கிழமை இந்தப் போராட்டம் நடைபெற்றது. அக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் தனியார் கம்பனி ஒன்றின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தின் தொழிற்சங்க தோட்ட கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உரிமைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு ஆதரவாகவே இன்று இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. தோட்ட மைதானத்தில் இடம்பெற்ற போராட்டத்தி்ற்கு மக்கள் அதரவு வழங்கியிருந்தனர்.
ஓகஸ்ட் 11 14:18

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க இலங்கை இராணுவம் ஏற்பாடு- விசேட ஆய்வு நடைபெறும் என்கிறார் தளபதி

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை (Social Media) தீவிரமாக கண்காணிப்பதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட குழுவை உருவாக்கியுள்ளதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் பதிவுகளை அவதானிக்கும் எனவும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது. இந்த மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்புச் செயலமர்வில், சமூக ஊடகங்களும் அதன் நம்பகத் தன்மையும் என்ற தெனிப்பொருளின் கீழ் சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
ஓகஸ்ட் 11 11:39

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்- இந்திய மத்திய அரசின் மீதும் கண்டனம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) ஈழத்தமிழருக்காக ஜெனிவாவில் குரல் கொடுத்துவரும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தமிழக பொலிஸாரினால் நீதிமன்ற உத்தரவையும் மீறி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. தூத்துக்குடியில் நீதிகேட்டு போராடியமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் உறவுகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தேசத் துரோக குற்றச்சாட்டில் திருமுருகன் காந்தியை கைது செய்ய முடியாதென சைதாப் பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருந்தது.
ஓகஸ்ட் 10 19:32

நீதிமன்றம் விடுதலை செய்த பின்னரும் திருமுருகன் காந்தி தமிழக காவல்துறையால் மீண்டும் கைது

(சென்னை, தமிழ்நாடு) இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு திரும்பும்போது பெங்களூர் விமான நிலையத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றம் சிறையில் வைத்திருக்க முகாந்திரம் இல்லையெனக் கூறி வழக்கை முடிவுறுத்தியது. தமிழக காவல்துறையும் விசாரணை முடித்து விடுவிடுப்பதாக, எழுத்து மூலம் அறிவித்தப்பின், மீண்டும் கைது செய்துள்ளது. 2017இல் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், தனது இயக்கத்தவர்களோடு ஒன்றாக சென்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததைத் தடை மீறி ஊர்வலம் என வழக்கு பதிவுசெய்து வைத்திருந்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
ஓகஸ்ட் 10 18:29

படுவான்கரைப் பிரதேசம் அபிவிருத்தியில் புறக்கணிப்பு- கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கும் அரசியல்வாதிகள் எமது கிராமத்திற்கு வரும் பிரதான வீதியைப் பார்த்துவிட்டுக் கருத்துக் கூறவேண்டும் என தும்பாலச்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் தி.வடிவேல் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி- தும்பாலச்சோலை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியான முரசு வீதி நீண்டகாலமாகச் சேதமடைந்துள்ளது. இந்த வீதி போக்குவரத்துக்கு உகந்ததாகவேயில்லை என வடிவேல் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.