செய்தி: நிரல்
ஓகஸ்ட் 17 19:11

நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு பாவனைக்கு ஏற்றதாக இல்லை- விவசாயிகள்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு இரண்டரைக்கோடி ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டபோதும், அது முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை என பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஈரளக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நன்மை கருதி அம்மனடி அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் அதன் நிர்மாணப் பணிகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசியல் நோக்கம் கருதி திறக்கப்பட்டதே தவிர விவசாயிகளின் முழுமையான பாவனைக்கு ஏற்றவாறு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்வில்லை என விவசாயிகள் முறையிட்டுள்ளனர். அம்மனடி அணைக்கட்டிக்கு அருகாக சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் காணப்படுகின்றன.
ஓகஸ்ட் 17 09:39

ஊழல் மோசடிகள் பற்றிய 18 வழக்கு விசாரனைகள் நிறைவு- மஹிந்தவும் அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்களா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட வழக்கு விசாரனைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபகச தொடர்பான ஊழல் மோசடிகளை விசாரனை செய்வதற்கு உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தில் 18 வழக்குகள் விசாரிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளன. ஆகவே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான காலம் நெருங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார். கொழும்பில் சென்ற புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் ராஜித சேனரட்ன, மஹிந்த மீதும் பல ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 16 12:29

உறுகாமம் பிரதேசத்தில் வேறு சமூகத்தவர்களைக் குடியேற்ற அமைச்சர்கள் சிலர் முயற்சி- பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிக்கும் சகோதர சமூகத்தைச் சேர்ந்த சிலர், இனங்களுக்குக்கிடையில் முரண்பாடுகளை தோற்று்வித்து அரசியல் லாபம் தேடுவதாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் க.சிவானந்தம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு உறுகாமத்தில், பிரதேசத்தைச் சேராதவர்களைக் குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெறுவதாக சிவானந்தம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். உறுகாமத்தில் இன விகிதாசாரத்தை அதிகரித்துக் காண்பிக்கும் நோக்கில் வாக்காளர் பதிவுகளும் இடம்பெறுவதாக அவர் கவலை வெளியிட்டார்.
ஓகஸ்ட் 16 11:21

தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டுக் கொலை- குற்றவாளி தப்பிக்க இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி பணம் வழங்கினார்

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் தலைநகர் கொழும்பில் பதினொரு தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான எதிரியான முன்னாள் கடற்படைச் சிப்பாய் நேவி சம்பத் மறைந்து வாழ்வதற்கு உதவியாக, ஐந்து இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதியும் இலங்கை முப்படைகளின் தற்போதைய பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இந்த நிதியை வழங்கியிருந்ததாக இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சென்ற செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்றதில் முன்னிலையானபோது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஓகஸ்ட் 15 14:55

மீனவர்களின் உபகரணங்கள் தீயிடப்பட்டமைக்கு இலங்கைப் படையினரே காரணம்- மீனவர்கள் தெரிவிப்பு

(முல்லைத்தீவு, ஈழம்) தென்பகுதியில் உள்ள கடற்கரைகளில் தமிழ் மீனவர்கள் சென்று வாடிகளை அமைத்து மீன்பிடியில் ஈடுபட முடியுமா என்று வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு அத்துமீறல் செயற்பாடுகளில் சிங்களவர்கள் ஈடுபடுவதாகவும் மைத்திரி- ரணில் அரசாங்கம் முரண்பாடுகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தமிழ் மீனவர்களின் எட்டு மீன்வாடிகள் உள்ளிட்ட மீ்ன்பிடி உபகரணங்கள் தீயிடப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட ரவிகரன், தமிழர்களைப் பலவீனமாகப் பார்க்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த ஒரு பக்க வன்முறையைத் தடுத்திருக்க முடியும் என்றும் ரவிகரன் கூறியுள்ளார்.