செய்தி: நிரல்
ஒக். 15 15:31

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்கின்றது - முதலாளிமார் சம்மேளனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) இலங்கையின் மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹட்டன் ஸ்டிரதன், மஸ்கெலியா கிலண்டில், கொட்டகலை மேபீல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்கள், ஆயிரம் ரூபாய்கள் அடிப்படை சம்பள உயர்வு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். முதலாளிமார் சம்மேளனத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
ஒக். 14 12:17

நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் மிரட்டல்-

(வவுனியா, ஈழம் ) தமிழ் மக்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் மாபெரும் போராட்டங்கள் வலுப்பெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழ் மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் குழு ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வழமை போன்று வாக்குறுதியளித்துள்ளார்.
ஒக். 12 21:50

அநுராதபுரத்துக்குள் நுழைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி

(வவுனியா, ஈழம்) வழக்கு விசாரணைகளின்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடுதலை கோரிய நடைபவனி இலக்கு எல்லையான அநுராதபுரத்தின் எல்லையைச் சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டன நடைபவனியை ஆரம்பித்தனர்.
ஒக். 12 12:59

யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலும் மண்டையோடுகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சாட்சியாக ஈழத்தின் பல பகுதிகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுவருகின்றன. மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடு மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அதிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி - பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது கை, கால் மற்றும் மண்டையோடு என்பனவும் மனித எலும்புகள் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஒக். 12 07:07

மன்னாரில் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களினால் பலர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கொழும்பை தலைமையகமாகக் கொண்டு மன்னாரில் கிளை அமைத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்கடன்களைப் பெற்று தினமும் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தென்னிலங்கையைத் தலைமையமாகக் கொண்டுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மன்னாரில் இயங்கி வருகின்றன. இந்நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து பல்வேறு வகையான கவர்ச்சிகர நுண்கடன் திட்டங்களை அமுல்படுத்தி பெண்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் அதிக வட்டியுடன் வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் கடனாளிகளிடமிருந்து அறவிடப்படுகின்றன.